நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஜூன் 28ம் தேதி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு கூறப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை கேள்வித் தாள் கசிந்துள்ளது. இதனால் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது நீட் கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அல்லும் பகலும் தங்களின் பிள்ளைகளின் லட்சியத்திற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த பெற்றோர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

அதனால் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.