பாட்னா

இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தங்களுக்குத் தேவை இல்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து பீகாரில் ‘மகாகத்பந்தன்’ என்ற கூட்டணி அமைக்கப்பட்டு ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வந்தனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆயினும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டதால், கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.

பிகார் மாநிலத்தின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது ராகுல் காந்தி,

“பிகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன்’ கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை. தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாட்டின் அனைத்து துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

தலித்துகள், ஓ.பி.சி. மற்றும் பிற பிரிவினரின் சரியான மக்கள் தொகையைக் கண்டறிய நம் நாட்டில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை. மணிப்பூரில் உள்நாட்டுப் போருக்கான சூழல் நிலவி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இன்னும் அங்குச் செல்லவில்லை.”

என்று உரையாற்றி உள்ளார்.