நீலகிரி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் ராகுல் காந்தி இன்று அந்த தொகுதிக்கு போகும் வழியில் தமிழ்நாட்டுக்கு வந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும்   காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி , இன்று  மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தாளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் காலை 9.45 மணிக்கு தரையிறங்கினார். அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் அவர் வந்த ஹெலிகாப்டரை சோதனை நடத்தினர்.

ராகுலை வரவேற்க  கேரள மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர்  ஹெலிபேடில் காத்திருந்தனர்.  ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்க போலீஸார் மறுத்ததால் பாதுகாப்பு படையினருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும் வாய்ப்பு உருவானதால் அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து பந்தலூரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் ஆ.ராசாவை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றினார். இதையடுத்து, அங்கிருந்து தாளூர்    செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு  வந்த ராகுல் காந்தி, தேவாலயத்தில் உள்ள கூட்டரங்கில் , நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர்  சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள் அவருடன் உரையாற்றினார். தொடர்ந்து சுமார் 20 நிமிடம் வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்தகொண்டார்.

பின்னர், ராகுல்காந்தி அங்கிருந்து வயநாடு புறப்பட்டு சென்றார்.

ராகுல்காந்தியின் இன்றைய (ஏப்ரல் 15) சுற்றுப்பயணம் விவரம்:

இன்று காலை 9.55மணி நீலகிரி

காலை 11.45மணி வயநாடு தெழங்காடி பகுதியில் வாக்கு சேகரிப்பு, 12.45 மணி அளவில் செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் பகுதி, பிற்பகல் 3.40 மணி அளவில் வெல்லமுண்டா, மாலை 4.30 மணி அளவில் படிஞ்சரதாரா பகுதி, இரவு 7.15 மணி அளவில் கோழிக்கோடு கடற்கரை பகுதியில்  நடைபெற உள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை.