பாட்னா :

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த மாநிலத்தின் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள பீகாரிகஞ்ச் தொகுதியில் சரத்யாதவ் மகள் சுபாஷினி, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்த சரத்யாதவ், முதல்- அமைச்சர் நீதீஷ்குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

சில கருத்து வேறுபாடுகளால் சரத்யாதவ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி விட்டார். அவரது மகள் சுபாஷினி, அரியானா மாநில காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளராக பீகாரிகஞ்ச் தொகுதியில் களம் இறங்கியுள்ள சுபாஷினியை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் “இதுவரை பீகார் தேர்தலில் வாக்காளர்களிடம் இருந்து எந்த உறுதிமொழியையும் நான் கேட்கவில்லை. இப்போது கேட்கிறேன்… எனது சகோதரி சுபாஷினியை இந்த தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”, என்று உருக்கமாக தெரிவித்தார்..

சரத்யாதவ் தற்போது உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

– பா.பாரதி