அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார் இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியுமென்றால் சிபிஐ மற்றும் EDயை வைத்து விசாரிக்காதது ஏன் ? என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, ​​மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி, அதானி குறித்து பேசுவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது.

தேர்தலுக்காக டெம்போக்களில் அந்த தொழிலதிபர்களிடம் இருந்து மூட்டை மூட்டையாக கருப்பு பணத்தை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர், “அதானி – அம்பானி ஆகியோர் டெம்போவில் பணம் தருகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா, இது உங்கள் தனிப்பட்ட அனுபவமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அப்படியென்றால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டியது தானே? பாஜக ஊழலை ஆதரிக்கும் ஊழல் நிறைந்த கட்சி என்பது நாட்டு மக்களுக்கும் இந்த உலகத்திற்கும் நன்கு தெரியும். நீங்கள் கொள்ளையடித்த பணத்தை மீட்போம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், “நாட்டின் மொத்த செல்வத்தையும் தனது கோடீஸ்வர நண்பர்களிடம் மோடி எப்படி ஒப்படைத்தார் என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள் – அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் இப்போது மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது. நாட்டு மக்களுக்கு எதுவும் மறைக்கப்படவில்லை. ” என்றார்.