சென்னை: தவெக தலைவர் விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு அம்மாநில காவல்துறை கடுமையான  கெடுபிடிகளை அறிவித்து உள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோர்  கியூர் கோடு மூலமே அனுமதிக்கப்படுவர் என்றும், தமிழ்நாட்டில் இருந்து வரும் தவெகவினருக்கு அனுமதிகிடையாது என்றும் கூறி உள்ளது.

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிச.9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ‘ஏற்கனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்தது. ரோடு ஷோக்கு பதில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. பொதுக்கூட்டத்திற்காக கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுத்த புதுச்சேரி அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  உப்பள ம் பகுதியை கொடுத்துள்ளது. இந்த  பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 3வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விஜய் சுற்றுப்பயணம் தடைபட்டது.

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி கிடைக்காத நிலையில், உப்பளம் துறைமுக வளாகத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) விஜய் பேசுகிறார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அவர் மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். வழக்கமாக பொதுக்கூட்டங்களில் மேடை, தொண்டர்களுக்கு இருக்கை அமைக்கப்படும். ஆனால் புதுவை உப்பளம் துறைமுக வளாக திடலில் தண்ணீரை வெளியேற்றி, மண்ணை கொட்டி சீரமைத்துள்ளனர். தொண்டர்கள் வந்து செல்ல கூடுதலாக துறைமுக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய் பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள  புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி.

அனுமதி பெறுபவர்களுக்கு ‘கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.

பொதுமக்களுக்குக் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.

பாதுகாப்புக்காக மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தொண்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரிந்து நிற்கத் தனித்தனித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

நாற்காலிகள் போட அனுமதி இல்லை. மேடையும் அமைக்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

. இதனை தவெகவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.