ண்டிகர்

காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் பிரியங்கா காந்தி என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையொட்டி அதற்குப் பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.    அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.   ஆனால் ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.   அதையொட்டி அவரது சகோதரியும் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை தலைவராக்க முயற்சிகள் நடந்தன.

காங்கிரஸ் தலைவர்களில் பலர் நேரு –  காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்.   ஆயினும் பிரியங்கா காந்தியும் தலைமை பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார்.   தாம் தற்போதுள்ள பணியில் தொடர்ந்து பணி புரிவதாகவும் புதியதாக யார் தலைவராக வந்தாலும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.  ஆயினும் பல தலைவர்கள் பிரியங்கா காந்தியை தலைமை பொறுப்பு ஏற்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியது வருந்தத்தக்கது.   அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி முழுமையான தகுதி உடையவர் ஆவார்.  ஆனால் இது குறித்து முடிவு எடுக்கக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.

ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.  எனவே அவருக்கு பதிலாகத் தலைமை பதவி ஏற்க பிரியங்காவை தவிர வேறு யாரும் சரியான தேர்வு இல்லை.   அவர் தலைவராவதை மட்டுமே நாடெங்கும் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் ஒப்புக் கொள்வார்கள்.   இந்தியாவுக்கு தற்போது ஒரு இளம் தலைவர் தேவைப்படுவதால் பிரியங்காவின் தலைமையே தற்போது தேவைப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.