மத்திய அரசு சமீபத்தில் 71 பழைய சட்டங்களை ரத்து செய்து, 4 சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. இதில், இந்திய வாரிசு சட்டம் (Indian Succession Act), 1925-ல் செய்யப்பட்ட மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், உயில் எழுதினால் நீதிமன்ற சான்றிதழ் (Probate) பெறுவது இனி கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வசித்த இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள் எழுதிய உயில் நடைமுறைக்கு வர கட்டாயமாக சான்று /சட்டபூர்வ அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்தது.
இப்போது அந்த கட்டாயம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தத்தின் மூலம், சான்று பெறுவது கட்டாயம் என்ற சரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பை உறுதி செய்ய விருப்பமுள்ளவர்கள் சான்றிதழ் கோரி நீதிமன்றம் செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருந்தால், அதிக மதிப்புள்ள நிலம், சொத்துகள் இருந்தால், வாரிசுகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருந்தால் நீதிமன்ற சான்றிதழ் பெறுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உயிலின் உண்மைத் தன்மை உள்ளிட்டவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை இந்த புதிய மாற்றம் எதுவும் செய்யாது என்றும் அந்த வழக்குகள் அப்படியே தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]