லக்னோ:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, உ.பி.யில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தற்போது ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா அங்கு பல இடங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து பாம்பு பிடிக்கும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று ஓட்டு வேட்டையாடிய பிரியங்கா, அங்கு வசிக்கும் மக்கள் வளர்க்கும் பாம்புகளுடன் விளையாடினார்.
அவர் பாம்புகளுடன் விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரசாரத்தின் ஒருபகுதியாக ரேபலியில் பேலா கிராமப்புறத்தில் உள்ள ஹன்சா கா பூர்வா பகுதியில் வசிக்கும் பாம்பாட்டி மக்களிடம் உரையாடினார். அவர்களிடம் இருந்த பாம்பை பிடித்து விளையாடியும், அவர்களின் வாழ்க்கை தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, காங்கிரஸ்-பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் கருத்தியலில் இருவேறு துருவங்கள். நாங்கள் எப்போதும் அவர்களை எதிர்த்து போராடுவோம், அவர்கள் அரசியலில் நமது முக்கிய எதிரி.
காங்கிரஸ் எந்த விதத்திலும் பிஜேபி பயனடைய விடாது, அதற்காக நாங்கள் கடுமையாக போராடுகிறோம், எங்கள் வேட்பாளர்கள் வலுவாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.