டெல்லி
மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று ராஜினாமா செய்வாரா என பிரியங்கா காந்தி வினா எழுப்பி உள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி மக்களவையில் பஹல்காம் தாக்குதல் விவகாரம் பற்றி பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, உரையாற்றி உள்ளார்,
அவர் தனது உரையில்,
”உளவு துறையின் தோல்வியையே இது காட்டுகிறது. பஹல்காமில் ஒரு மணிநேரம் தாக்குதல் நடந்தது. அப்போது ஒரு வீரர் கூட இல்லை. அது ஏன்? 2020-க்கு பின்னர் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் மட்டுமின்றி வீரர்களும் உயிரிழந்து உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு?
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது, அப்போது உள்துறை மந்திரியாக இருந்தவர் பதவி விலகினார். இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகுவாரா?
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் உடனே கொல்லப்பட்டனர் என பேசியுள்ளார். பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது பிரதமர், பாதுகாப்பு மந்திரியின் பொறுப்புதானே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அவையில் அமர்ந்துள்ள பலருக்கு பாதுகாப்பு வளையம் உள்ளது. ஆனால், பஹல்காமில் 26 பேர், அவர்களுடைய குடும்பத்தினரின் முன் கொல்லப்பட்டபோது, அவர்கள் அனைவருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை.
இந்த அரசு, கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முயற்சிக்கிறது. நாட்டு மக்களின் மீது அக்கறை கொள்வதில் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை. அவர்களின் மனதில் மக்களுக்கு இடமில்லை என்பதே உண்மை. அவர்களுக்கு எல்லாமே அரசியல், விளம்பரம். அவ்வளவுதான் என்றும் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வர யார் காரணம்? என தெளிவுப்படுத்த வேண்டும். வேறொரு நாடு கூறி போரை நிறுத்தியது என்பது இதுவே முதல்முறை. நாட்டுக்கு இது அவமானம்”
என்று தெரிவித்துள்ளார்,