டெல்லி: அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருக்கிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா இதை கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்த வரை இந்தியா, 2வது கட்டத்தில் இருக்கிறது.
3ம் கட்டம் எனப்படும் அனைவருக்கும் பரவல் என்ற நிலை உருவாகவில்லை. உரிய, அங்கீகரிக்கப்பட்ட பெற்ற தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் அந்த சோதனையை இலவசமாக நடத்த வேண்டும்.
இந்திய மருத்துவ கவுன்சிலான ஐசிஎம்ஆரின் கீழ் தற்போது 72 ஆய்வகங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. மேலும் 49 ஆய்வகங்கள் இந்த வார இறுதிக்குள் தயாராகி விடும்.
கடந்த 14 நாட்களில் சர்வதேச விமானங்களில் பயணித்தவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் இப்போது உள்ள கட்டுப்பாடுகளின் படி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா அறிகுறி உள்ள நபர்களுடன் நெருங்கி பழகியவர்களும் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். நோயாளிகளை பராமரிக்கும் அனைத்து சுகாதார பணியாளர்களும் அறிகுறி இருந்தால் அவர்களும் சோதிக்கப்பட வேண்டும்.
தேசிய அங்கீகாரம் பெற்ற தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைகளை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் தங்களின் பணிகளை ஆரம்பிக்க உள்ளனர் என்றார்.