சென்னை: சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை, தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
எழும்பூர் அரசு தாய் – சேய் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 68 குழந்தைகள் பாதுகாப்பாக பிறந்ததையொட்டி, சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டப்பெற்றனர். சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதம் பிரசவம் நடைபெறுகிறது; 35 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் சிசேரியன் என்ற வகையிலும் குழந்தை பிறந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதமாக உள்ள சுகப் பிரசவம், தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை, தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும்,
வெளிநாடுகளில் 80 சதவீதம் சுகப் பிரசவம்; 20 சதவீதம் மட்டுமே சிசேரியன். தமிழகத்தில் முன்பெல்லாம், 100 சதவீதம் சுக பிரசவமாக இருந்தது. தற்போது, சுகப் பிரசவம் குறைந்து சிசேரியன் சதவீதம் அதிகரித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள், சிசேரியனை ஊக்குவிக்கக்கூடாது. மேலும் குறிப்பிட்ட தேதிகளில், குழந்தையை வெளியில் எடுப்பது தான் காரணமாக உள்ளது.இவற்றை ஊக்கப்படுத்தக் கூடாது என கூறியவர், இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தார்.