பெல்லாரி

பெல்லாரி சிறை நிர்வாகம் கன்னட நடிகர் தர்ஷனுக்கு டிவி வழங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அங்கு சொகுசு வசதி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும் நடிகர் தர்ஷன் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் தர்ஷன் தனது அறைக்கு டி.வி. கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார்.  தான் தனது வழக்கு தொடர்பான முனேற்றங்கள் குறித்தும் வெளி உலகில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் டி.வி.கேட்பதாக தெரிவித்து இருந்தார்

பெல்லாரி சிறை நிர்வாகம் சிறை வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு டி.வி. வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி அவருக்கு நாளைக்குள் டி.வி. வழங்கப்படும் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.