டில்லி

டந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் இனி நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் பாஜகவுக்குச் சாதகமாக ஆகி உள்ளது.

நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது.   குறிப்பாக நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.   பல மாநிலங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறாக இந்த வெற்றியை பாஜக அடைந்துள்ளது.

இது குறித்து அரசியல் நோக்கர்கள்,

“நடந்து முடிந்த 5 மாநில தேர்தலைத் தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களும், காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்களும் அடுத்தடுத்து நடக்க உள்ளன. ஆகவே இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் வெற்றி கிடைத்திருந்தால் பாஜகவின் ஆதிக்கத்தைத்  தகர்ப்பதற்கான பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இவ்வாறு நடந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிகளின் திட்டம் வெற்றி பெற்றிருக்கும்.  தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிகிறது என்பதால் புதிய ஜனாதிபதி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஜனாதிபதியை மாநிலங்களவையைச் சேர்ந்த 223 எம்பி.க்கள், மக்களவையின் 543 எம்பி.க்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேர் வாக்களித்துத் தேர்வு செய்வார்கள்.  இவர்களின் மொத்த வாக்கு எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.   ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்கும் பட்சத்தில், மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவரே புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார்.

உபி தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருந்தால், எதிர்க்கட்சிகளின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பொது வேட்பாளராக நிறுத்தும் திட்டம் நனவாகி இருக்கும். இப்போது, அதற்கு வாய்ப்பு குறைந்து  விட்டது. இந்த 4 மாநில தேர்தல் வெற்றி, பாஜகவுக்கு மிகப்பெரிய சாதகமாகி இருக்கிறது.”

எனத் தெரிவித்துள்ளனர்.