சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை பிரச்சித்தி பெற்ற வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
நாளை (டிச.17) தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு நடத்தவுள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர், ஸ்ரீபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் டிசம்பர்  டிசம்பர் 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, நாளை வேலூர் வருகை தரும் திரவுபதிமுர்மு, வேலூர் பொற்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து, அவரை வரவேற்க கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் வரவேற்பு ஏற்பாடுகள் , பாதுகாப்பு எற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  ஆன்மீக பயணமாக வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பொற்கோயிலுக்கு  நாளை வருகை தர உள்ளார். நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்து அடைகிறார். இதன் பின்னர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் ஹெலிபேடிற்கு காலை 11.05 மணிக்கு வருகை தர உள்ளார்.

ஹெலிபேடில் தரையிறங்கியதும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீபுரம் ஹெலிபேடில் இருந்து சாலை மார்க்கமாக கமலா நிவாஸ் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து பொற்கோயிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். காலை 11.30 மணி முதல் 12.15 மணிக்குள் தரிசனம், தியான மண்டப திறப்பு விழா மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், மதியம் 12.15 மணிக்கு கமலா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 12.25 மணிக்கு ஸ்ரீபுரம் ஹெலிபேடிற்குச் சென்று 12.35 மணிக்கு MI-17 ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருப்பதி புறப்பட்டு செல்கிறார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் “Red Zone” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களால் 17.12.2025 அன்று மத்திய அரசு பணிகள், மாநகராட்சி/நகராட்சி சார்பாக பணிகள், தனியார் நிறுவனப் பணிகள் அல்லது எந்த வகையான விழாக்களுக்காகவும் டிரோன் (Drone) மற்றும் Civil Remotely Piloted Aircraft System (RPAS) பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

முன்னதாக  குடியரசு தலைவர் சுற்றுப்பயணம் தொடர்பாக,  குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   முர்மு,   டிச.16-ஆம் தேதி கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மாலவல்லியில் நடைபெறும் ஆதி ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வர சிவயோகி மகாசுவாமிகளின் 1066-ஆவது ஜெயந்தி விழாவை தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து,   டிச.17-ஆம் தேதி, தமிழகத்தின் வேலூரில் உள்ள பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்து பூஜை செய்கிறார்.

இதைத்தொடர்ந்து, தெலங்கானாவின் செகந்தராபாதில் உள்ள போலாவரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் ஓய்வு மாளிகைக்குச் செல்கிறார்.

டிச.19-ஆம் தேதி, தெலங்கானா பணியாளர் தேர்வாணையத்தால் ஹைதராபாதில் ஏற்பாடு செய்யப்படும் தேர்வாணைய தலைவர்களுக்கான தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.

டிச.20-ஆம் தேதி, பிரம்மா குமாரிகள் சாந்தி சரோவர் அமைப்பின் 21-ஆம் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ஹைதராபாதில் அந்த அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள் என்ற பெயரில் நடைபெறும் மாநாட்டில் குடியரசுத் தலைவர் தலைமை உரையாற்றுகிறார் .

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]