டெல்லி:” 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என பெயரில் பாடம் இடம்பெற்றுள்ளதை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி. உடனடியாக என்சிஇஆா்டி வலைதளத்தில் இருந்து புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகம் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் பாடப்புத்தகத்தின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பாடப் பிரிவை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் ஊழல்” என்ற பகுதி இடம்பெற்றிருந்த நிலையில், புத்தகம் விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
முன்னதாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியவர், நீதித் துறை மற்றும் அதன் நோ்மையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்தவர். அதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்பேன் என்றவர், இந்த விவகாரத்தில் சட்டம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டுமென எனக்குத் தெரியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான மேற்கண்ட அமா்வு விசாரிக்கவுள்ளது.
இந்த நிலையில், ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு என்சிஇஆா்டி வருந்தி மன்னிப்பு கோருவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக . என்சிஇஆா்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலைப் பெற்றபோது, அதில் ‘சமுதாயத்தில் நீதித் துறையின் பங்கு’ என்ற தலைப்பு கொண்ட பாடப் பிரிவில் சில தகாத உரை இருப்பது கண்டறியப்பட்டது. இதே கருத்தை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்தது. பின்னா், அந்த நூலின் விநியோகத்தை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று அந்தத் துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு இணங்கி, அந்த நூலின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறை மீது என்சிஇஆா்டி மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை நிலைநாட்டி, அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக வும் நீதித்துறை திகழ்கிறது என்றே என்சிஇஆா்டி கருதுகிறது. நூலில் சில தகாத கருத்துகள் இடம்பெற்றது உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட வில்லை. முற்றிலும் தற்செயலானதாகும். அந்தப் பாடப்‘பிரிவு உரிய ஆலோசனைகளுடன் மாற்றியமைக்கப்பட்டு மாணவா்களுக்கு புதிய நூல் வழங்கப்படும். இந்தத் தவறுக்காக என்சிஇஆா்டி வருந்தி மன்னிப்பு கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடப்புத்தகங்களின் நோக்கம் மாணவர்களிடையே அரசியலமைப்பு கல்வியறிவு, நீதித் துறை மதிப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு குறித்த தகவலறிந்த புரிதலை வலுப்படுத்துவதாகும். “எந்தவொரு அரசியலமைப்பு அமைப்பின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைக்கவோ எந்த நோக்கமும் இல்லை. அதன் தொடர்ச்சியான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, என்சிஇஆா்டி ஆக்கபூர்வமான கருத்துகளுக்காக காத்திருக்கிறது. மேலும், 2026-27 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டு புதிய நூல் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிஆர்டி யின் புதிய புத்தகத்தில் ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற அத்தியாயம் இருந்தது, அதில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் – ஊழல் மற்றும் “போதுமான எண்ணிக்கையிலான நீதிபதிகள் இல்லாதது, சிக்கலான சட்ட நடைமுறைகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற பல காரணங்களால் ஏற்படும் பெரிய அளவிலான தேக்கம்” என்ற பகுதி இடம்பெற்றிருந்தது.
‘எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட்’ பகுதி 2 – என்ற புத்தகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. நீதித்துறையில் ஊழல் குறித்த பிரிவில், நீதிபதிகள் நீதிமன்றத்தில் தங்கள் நடத்தையை மட்டுமல்ல, அதற்கு வெளியே அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் நிர்வகிக்கும் ஒரு நடத்தை விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது.
இது பொறுப்புணர்வைப் பேணுவதற்கான நீதித்துறையின் உள் பொறிமுறையையும், “மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) மூலம் புகார்களைப் பெறுவதற்கான நிறுவப்பட்ட நடைமுறையையும்” குறிப்பிட்டது,
2017 மற்றும் 2021 க்கு இடையில் இதுபோன்ற 1,600 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. “குற்றச்சாட்டுகள் தீவிரமான வழக்குகளில், நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நீதிபதியை நீக்க முடியும். அத்தகைய தீர்மானம் முறையான விசாரணைக்குப் பிறகுதான் பரிசீலிக்கப்படும், அதன் போது நீதிபதிக்கு வழக்கின் தங்கள் பக்கத்தை முன்வைக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்படுகிறது,” என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இருப்பினும், நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை அனுபவிக்கிறார்கள். ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு, இது நீதியை அணுகுவதில் உள்ள சிக்கலை மோசமாக்கும். எனவே, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீதித்துறை அமைப்பில் நம்பிக்கையை வளர்க்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழல் சம்பவங்கள் எங்கு எழுந்தாலும் அவற்றை விரைவாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் யூனியன் மட்டங்களில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
[youtube-feed feed=1]