வாஷிங்டன்
அரசியல் வல்லுநர்கள் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு தேர்தல் களத்தை மாற்றலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியாவில் ந்டந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரை காவல்துறையினர்சுட்டுக் கொன்றனர்.
டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் பாதுகாப்பு படையினர் அவரை பத்திரமாக அழைத்து சென்றபோது டிரம்ப் கூட்டத்தினரை நோக்கி கையை உயர்த்திக்காட்டி ‘போராடுங்கள்’ என கூறியவாறு நகர்ந்து சென்றார். அவர் காரில் ஏறும்போதும் தனது ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்தி காட்டினார்.
இந்த புகைப்படங்களை டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் “அமெரிக்காவுக்குத் தேவையான போர் வீரர் இவர்தான்” என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் முகத்தில் ரத்தத்துடன் காட்சியளிப்பது, கையை உயர்த்தி மக்களை நோக்கிக் கத்துவது, பாதுகாப்பு படையினரால் சூழப்பட்டு மேடையை விட்டு வெளியேறுவது ஆகியவற்றின் அசாதாரண புகைப்படங்கள் அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் இடம் பெறுவது மட்டுமல்லாது, நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலின் போக்கையே மாற்றக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.