நியஸ்பாண்ட்:
மன்னார்குடி ராஜகுருவான தில்லை அரசர் ரொம்பவே மனம் நொந்த கிடக்கிறார். குடும்பத்துக்குள் பிளவு, கட்சி சின்னம் குடும்பத்தைவிட்டுப் போன சோகம்.. இதையெல்லாம்விட, தன் மீதான வழக்கில் சிறைத்தண்டனை கிடைத்தது என்று பதட்டத்தில் இருக்கிறார். உடல் நலம் சரியல்லை என்று சொல்லி தண்டனையில் இருந்த தப்பித்திருக்கிறார்.
இந்த நிலையில், கட்சி சின்னம் கைவிட்டுப் போனது குறித்து, இவரிடம் பேட்டி எடுக்க தீர்மானித்திருக்கிறது அந்த எப். எம். வானொலி. “ஹலோ.. கொஞ்சம் உங்க கருத்தைச் சொல்லுங்களேன்” என்று, இரண்டு நாட்களுக்கு முன்பு தில்லை அரசரிடம் அந்த வானொலி கேட்டிருக்கிறது.
உடனே ஒப்புக்கொண்ட தில்லை அரசர், தன் ஆதங்கங்களை எல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். வானொலி குழுவும், பேட்டி நன்றாக வந்திருக்கிறதே என்று மகிழ்ந்து அதை இன்று (ஞாயிறு) ஒலிபரப்ப தயாராக இருந்தது..
இதற்கிடையே, தில்லை அரசர், தனது சட்ட நண்பர் ஒருவரிடம், இந்த பேட்டி குறித்து எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் பதறிப்போய், “உடல் நலம் சரியில்லை என்று சொல்லித்தான் தண்டனையில் இருந்து தப்பித்திருக்கிறீர்கள். இந்த நிலையில் உங்கள் பேட்டி வெளியானால், “இவரது உடல் நலம் நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லி உள்ளே வைத்துவிடுவார்கள். உங்கள் மீது மத்திய மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறது” என்று எச்சரித்திருக்கிறார்.
வியர்த்து விறுவிறுத்துப்போன தில்லை அரசர், சம்பந்தப்பட்ட வானொலிக்கு போன் செய்து தனது பேட்டியை வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
வானொலி நிர்வாகத்தினரோ, “ ஞாயிறு அன்று ஒலிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சி அது. அந்த பேட்டியை ஒலிபரப்புவதாக அறிவிப்பெல்லாம் செய்துவிட்டோம் நேயர்கள் விரும்பிக்கேட்கும் நிகழ்ச்சி. ஆகவே ஒலிபரப்பை நிறுத்த முடியாது” என்று தெரிவித்துவிட்டார்கள்.
பயந்துபோன தில்லை அரசர், அந்த வானொலியின் அதிபரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவரோ, “நிகழ்ச்சி விவகாரங்களில் நான் தலையிடுவது கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் விடாத தில்லை அரசர், “நீங்கள் பால் போன்ற நல் உள்ளம் கொண்டவர். என் நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். அந்த பேட்டியை நிறுத்தச் சொல்லுங்கள்” என்று கெஞ்சியிருக்கிறார்.
இதையடுத்து இன்று ஒலிபரப்பாக வேண்டிய அந்தப் பேட்டி நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக வேறு ஒரு அரசியல் வி.ஐ.பி. பேட்டி ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
பிறகுதான் தில்லை அரசர் நிம்மதி பெருமூச்சு விட்டாராம்.
“ஏ.. மத்தியே.. ஏ.. அரசே. என்றெல்லாம் பேசி வீராப்பு காட்டியவர் இப்படி பம்மிக்கிடக்கிறாரே..” என்று கிண்டலாக சிரிக்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள்.