பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. மேலும், அவர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் பாஜக நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டமன்றத்தின் ஆயுட் காலம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம் என்பதால், அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து நவம்பர் 14ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மாநிலத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்துள்ள இண்டியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) சான்றிதழ் பெறவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து சான்றிதழ் பெறாமல், சமூக ஊடக வலைத்தளங்கள் உட்பட, எதிலும் அரசியல் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வேட்பாளர்கள் தங்கள் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் குறித்து வேட்புமனு தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 6, 11: பீகாரில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல்! தேதிகள் அறிவிப்பு…
[youtube-feed feed=1]