சென்னை: நடிகர் சூர்யாவின்  ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யா பாமக இடையே தொடரும் மோதல், தற்போது மீண்டும் புதிய படம் வெளியாக உள்ள நிலையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூர்யா நடித்த  ‘ஜெய்பீம்’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் வன்னியர்களை இழிவுபடுத்தி உள்ளதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் படத்தில் சில மாற்றங்களும் செய்ப்பட்டன.  ஆனால், அதை ஏற்க மறுத்த பாமக, சூர்யா வன்னியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. இதனால் நடிகர் சூர்யா பொதுஇடங்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை (மார்ச் 10ந்தேதி) தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ”ஜெய்பீம்’ படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்திய நடிகர் சூர்யா மன்னிப்பு கோராத வரை கடலூர் மாவட்டத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது’ என கடலூர் மாவட்ட பாமக மாணவர் சங்க மாநிலச் செயலாளர் விஜயவர்மன் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.  மேலும் பாமகவினர் அதிகம் உள்ள பகுதிகளிலும் சூர்யாவின் படம் வெளியிட மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இநத் நிலையில்,  சென்னை – தியாகராய நகர், ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு சுழற்சி முறையில் 5 காவலர்கள் துப்பாக்கியோடு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை படம் வெளியாக உள்ள நிலையில்,  மேலும், கூடுதலாகப் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.