டெல்லி: இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக குவைத் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்று காலை நாடு திரும்பினார். முன்னதாக அந்நாட்டின் உயரிய விருதை பெற்றதுடன், அந்நாட்டுடன் 4 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இந்தியா-குவைத் இடையே 4 ஒப்பந்தங்கள் – பிரதமா், குவைத் மன்னா் முன்னிலையில் கையெழுத்தாகின. அதன்படி, இந்தியா, குவைத் இடையே பாதுகாப்பு, கலாச்சாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான 4 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று (டிசம்பர் 22 /ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகின.
குவைத் மன்னரின் அழைப்பு ஏற்று 43 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோடி, இரண்டுநாள் அரசு முறை பயணாக குவைத் (டிசம்பர் 21ந்தேதி) சென்றார். கடந்த 1981-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி குவைத் சென்ற பிறகு, வேறு எந்தவொரு பிரதமரும் அரசுமுறை பயணமாக குவைத் செல்லாத நிலையில், தற்போது பிரதமா் மோடி குவைத் சென்று வந்துள்ளார்.
குவைத் சென்ற பிரதமர் மோடிக்க, குவைத் மன்னரின் மாளிகையில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, குவைத் பிரதமா் அமகது அப்துல்லா அல்-அகமது அல்-ஷபா, பட்டத்து இளவரசா் ஷபா அல்-காலித் அல்-ஹமத் அல்-முபாரக் ஆகியோரையும் பிரதமா் சந்தித்துப் பேசினாா்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து, குவைத் மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல்-ஷபாவுடன் பிரதமா் மோடி விரிவான பேச்சு வாா்த்தை நடத்தினாா். வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு, உள்கட்டமைப்பு, நிதி சாா் தொழில்நுட்பம், மக்கள் ரீதியிலான தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியூக கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான விரிவான செயல்திட்டம் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியா-குவைத் இடையிலான வரலாற்று ரீதியிலான நட்புறவை நினைவுகூா்ந்த அவா்கள், ஐ.நா. மற்றும் இதர பன்முக தளங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை கடைப்பிடிப்பதோடு, இருதரப்பு நல்லுறைவை மேலும் விரிவுபடுத்த உறுதிபூண்டனா். இதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் உள்பட 4 ஒப்பந்தங்கள், பிரதமா் மோடி-மன்னா் முன்னிலையில் கையொப்பமாகின.
அதன்படி, பாதுகாப்புத் துறையில் பயிற்சி, பணியாளா்கள்-வல்லுநா்கள் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி-மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கு மேற்கண்ட ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக பிற ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
முன்னதாக இந்த பேச்சுவார்த்தையின்போது, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கத்தாா், குவைத் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக குவைத்துக்கு பிரதமா் பாராட்டு தெரிவித்தாா்.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடிக்கு, குவைத் நாட்டின் உயரிய விருது பிரதமா் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் முபாரக் அல்-கபீா்’ விருது வழங்கப்பட்டது.
இந்தியா-குவைத் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிக்கும் நோக்கில், பிரதமருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் உள்ள மன்னரின் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமா் மோடிக்கு மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல் ஷபா விருதை வழங்கி கெளரவித்தாா்.
அமெரிக்க முன்னாள் அதிபா்கள் பில் கிளின்டன், ஜாா்ஜ் புஷ், பிரிட்டன் இளவரசா் சாா்லஸ் உள்ளிட்டோா் இவ்விருதை பெற்றவா்களாவா். பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்ட 20-ஆவது சா்வதேச விருது இதுவாகும். கடந்த நவம்பரில் நைஜீரியா, கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள் பிரதமருக்கு வழங்கப்பட்டன. இருதரப்பு உறவுகள் மற்றும் உலக சமூகத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிப்பதாக குறிப்பிட்டு, இவ்விருதுகள் அளிக்கப்பட்டன.
இதுகுறித்து பின்னா் பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குவைத் மன்னரிடம் இருந்து முபாரக் அல்-கபீா் விருதை பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இவ்விருதை 140 கோடி இந்திய மக்கள், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினா் மற்றும் இரு நாடுகள் இடையிலான வலுவான நட்புறவுக்கு சமா்ப்பிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மற்றொரு பதிவில், குவைத் மன்னா் உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது; இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்தியதன் மூலம் வருங்காலத்தில் அது செழித்தோங்கும் என்று பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
2022-23 நிதியாண்டில் ஜிசிசி நாடுகளுடனான இந்தியாவின் மொத்த வா்த்தக மதிப்பு 184 பில்லியன் டாலா்கள் (ரூ.15.67 லட்சம் கோடி) ஆகும். இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் 6-ஆவது பெரிய நாடாக உள்ள கத்தாருடன் இந்தியாவின் வா்த்தக மதிப்பு 10.47 பில்லியன் கோடி (ரூ.89,000 கோடி). குவைத் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்து புறப்பட்ட பிரதமா் மோடியை, குவைத் பிரதமா் அமகது அப்துல்லா அல்-அகமது அல்-ஷபா விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைத்தாா். இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.