நாகர்கோவில்:  கன்னியாகுமரிக்கு விரைவில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என  குமரி மாவட்ட பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும், காங்கிரஸ் – INDI ஊட்டணி தமிழ்நாட்டை வளர்ச்சியை நோக்கி செலுத்தாது. ஏனெனில் அவர்களின் வரலாறு என்பது ஊழல்கள் என்றம், அயோத்தி கோயில் நிகழ்ச்சியை டிவியில் பார்க்கக்கூட தடை விதித்தது திமுக என்று கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

கன்னியாகுமரி  அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில்  இன்று முற்பகல் நடைபெற்ற   பாஜக பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்; பிரதமர் மோடிக்கு பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றனர். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “என் அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே.. வணக்கம்!” தமிழில் உரையை தொடங்கினார். தொடர்ந்து,  பேசுகையில், வ.உ.சி. துறைமுகம், மீனவர்களுக்கு தற்போது பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ; குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை ரயில் பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று உறுதி அளித்தார்.

மேலும், நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். என்னால் தமிழ் மொழியைத் தெளிவாகப் பேசமுடியவில்லை. தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது; தொழில்நுட்பத்தின் உதவியுடன் இனி நான் உங்களுடன் தமிழில் பேச உள்ளேன்; நமோ செயலி இனி தமிழ் மொழியிலும் செயல்படும்.  நான் பேசும் இந்தி பேச்சை செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழில் மாற்றி வெளியிடப்படவுள்ளது  என்றார். 

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியவர்,  நான் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி யிருக்கிறது.

திமுக, காங்கிரஸ் உள்ள இந்தியா கூட்டணியை விட பாஜகவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். கன்னியாகுமரி எப்போதும் பாஜகவிற்கு ஏராளமான அன்பை கொடுக்கிறது; மார்த்தாண்டம் – பார்வதிபுரம் மேம்பாலத்தை அமைத்துக் கொடுத்தது பாஜக அரசுதான்

நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்த விட்டனர் என்றவர்,  நாட்டை துண்டாட வேண்டும் என நினைப்பவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்; மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பல்வேறு ஊழல்கள் அரங்கேற்றப்பட்டன; கேலோ இந்தியாவை நாம் நடத்துகிறோம், அவர்கள் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்தார்கள்; நாங்கள் 5ஜி கொண்டு கொண்டுவந்தோம், அவர்கள் 2ஜி ஊழல் செய்தார்கள். நாங்கள் உதான் திட்டத்தை கொண்டு வந்தோம், ஆனால் அவர்கள் ஹெலிகாப்டரில் ஊழல் செய்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.

திமுக அரசு ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை கூட நேரலையில் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை, மக்களுக்கு தடை விதித்து,  இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் அடையாளத்தை, பெருமையை பாதுகாப்பதில் பாஜக என்றுமே முன்னணியில் இருக்கும் என்றார்.

திமுக இண்டி கூட்டணியில் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க முடியாது, அவர்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காக கொண்டுவர்கள், “இந்த முறை தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு திமுக-காங்கிரஸ் இந்திய கூட்டணியின் ஆணவத்தை தகர்த்தெறியும் என்றவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக இனி எனது அனைத்து உரைகளையும் நீங்கள் தமிழில் கேட்கலாம் என்றார்.

பிரதமர் மோடி பேச்சின் விவரம்:

“கன்னியாகுமரி எப்போதும் பா.ஜ.க.விற்கு ஏராளமான அன்பை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணி எப்போது வாய்ப்பு கிடைக்கும்? இங்குள்ள மக்களை சுரண்டலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அவர்கள் நடவடிக்கையை கடந்த 20 ஆண்டுகளாக பார்த்தால் அவர்கள் எண்ணம் நமக்கு புலப்படும்.

ஆனால், நம் அடல்பிகாரி வாஜ்பாய் வடக்கு – தெற்கு வழித்தடத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். கன்னியாகுமரி நரிப்புறம் பாலம் பல ஆண்டுகளாக அவர்கள் நிறைவேற்றாமல் இருந்தார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதை நாங்கள் நிறைவேற்றினோம்.

இங்குள்ள அரசு கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை அமைக்க அனுமதி கூட கொடுக்கவில்லை. அதற்காக கூடுதல் நிதி கொடுக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் பணியைத் தொடங்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை செய்து முடித்தது பா.ஜ.க. அரசு. மார்த்தாண்டம் – பார்வதிபுரம் மேம்பாலம் அமைக்க நமது மக்கள் பல ஆண்டுகாலமாக கேட்டுக் கொண்டே இருந்தனர். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு அது கேட்கவில்லை.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி முடிந்த பிறகுதான் அந்த வேலை முடிந்தது. நமது மக்கள் 40 ஆண்டுகாலமாக இரட்டை ரயில் பாதை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. பா.ஜ.க. அரசு வந்த பிறகுதான் இந்த வேலையும் விரைவில் செயல்படத் தொடங்கியது, விரைவில் இரட்டை ரயில் பாலமும் வந்துவிடும்.

தமிழ்நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் மும்முரமாக உள்ளோம். கடந்த மாதம் தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டினேன். நமது பகுதி மீனவர்கள் நன்மைக்காக, அவர்கள் நலனுக்காக பா.ஜ.க. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நவீன மீன்பிடி படகுகளுக்கு நிதி உதவி வழங்குவது, அவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு வரம்பிற்குள் கொண்டு வருவது என மீனவர்களின் நன்மைக்காக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ சமுதாயத்தின் நமது நண்பர் ஜாய்னி குரூஸ் ஆற்றிய பணிகளை நான் பாராட்டி நினைவுகூர்கிறேன்.

தமிழ்நாட்டில் சாலைத் தொடர்பை மேம்படுத்தவும், ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் 10 ஆண்டு களில் 50 ஆயிரம் கோடி நெடுஞ்சாலை பணிகள் முடிந்துள்ளது. 70 ஆயிரம் கோடி பணிகள் நடைபெற்று வருகிறது. 2009 – 2014 காலகட்டத்தில் காங்கிரஸ் – தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே பணிக்காக ஒதுக்கிய திட்ட மதிப்பீடு ஆண்டுக்கு ரூபாய் 800 கோடி கூட இல்லை. ஆனால், பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய பணம் ஆண்டுக்கு 6 ஆயிரத்து 500 கோடி ஆகும்.

தி.மு.க. தமிழ்நாட்டின், தமிழ் பண்பின் எதிரி. சாதாரண எதிரியல்ல. கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி. ராமர் கோயில் திறப்புக்கு முன்பு நான் தமிழ்நாடு வந்தேன். பழமையான கோயிலுக்கும், புண்ணிய தலங்களுக்கும் சென்று பூஜை செய்தேன். ஆனால், தி.மு.க. அரசு என்ன செய்தது? அயோத்தியில் நடக்கும் கும்பாபிஷேகத்தை பார்க்கக்கூட அவர்களுக்கு விருப்பம் இல்லை. அயோத்தியில் நடக்கும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை தமிழகத்தில் பார்ப்பவர்களுக்கு கூட  தடை விதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்தளவு அவர்களுக்கு வெறுப்பு. உச்சநீதிமன்றமே அவர்களை கண்டிக்கும் நிலை இருந்தது.

நமது கலாச்சாரத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் தி.மு.க. வெறுப்பை கக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அடையாளத்தை, பெருமையை பாதுகாக்க பா.ஜ.க. என்றும் முன்னிலையில் உள்ளது. அவர்கள் தூற்றல்களையும், பேச்சுக்களையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த தி.மு.க. – காங்கிரஸ் அரசு மவுனம் காக்கிறது. அவர்கள் நமது கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை அழிக்கப் நினைத்தார்கள்.

ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடு செய்தது நமது பா.ஜ.க. அரசு. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பெருமை. ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டின் எந்தவொரு பெருமை மிக்க பாரம்பரியமிக்க விஷயமாக இருந்தாலும் மோடி இருக்கும் வரை அதை யாராலும் அசைக்க முடியாது.”

இவ்வாறு பேசினார்.