சென்னை: தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 9) பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளுடன் தொடங்கி யுள்ளன. தேர்வுகளில் எவ்வித முறைகேடு ஏற்படுவதை தடுக்க,  கண்காணிப்பு பணிகளில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியா  ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 7,99,892 மாணவ-மாணவிகளும், 26,441 தனித் தேர்வர்களும் என மொத்தம் சுமார் 8.26 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 4,221 பள்ளிகளில் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பிராக்டிக்கல் எக்சாம் எனப்படும் செயற்முறை தேர்வு இன்று தொடங்கி உள்ளன.  இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட மொத்தம் 28 பாடங்களுக்கு  செய்முறைத் தேர்வுகளில்  நடத்தப்படுகின்றன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சமூக இடைவெளி மற்றும் வசதிகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளியும் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல்கட்ட தேர்வு தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக தேர்வுதுறை முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.   கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 9ந்தேதி)  தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும்.

தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடக்காமல் இருக்க, அந்தந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பதிலாக, வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுகள் முடிந்தவுடன், பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை உரிய ஆவணங்களுடன் தேர்வுத் துறை அலுவலகத்தில் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.

இந்த ஆண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் விரும்பினால் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் செய்முறைத் தேர்வுக்குப் பதிலாக, அந்தப் பாடம் தொடர்பான கொள்குறி வகை (Objective type) வினாக்கள் அடங்கிய எழுத்துத் தேர்வை எழுதலாம்.

அடுத்தடுத்த தேர்வுகள்

பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும்.

செய்முறைத் தேர்வுகள் முடிந்த கையோடு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பிரதான பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வுகளை எதிர்கொள்ளப் பள்ளிக் கல்வித்துறை தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

[youtube-feed feed=1]