கடலூர்: கடலூர் பகுதியில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அருகே நல்லாத்தூரில்  உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில்  திமுக நிர்வாகி மணிவண்ணன் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற்றது.  இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக  திமுக எம்எல்ஏ அய்யப்பன் பங்கேற்றார். நேற்று இரவு 8மணி அளவில் அய்யப்பன் எம்எல்ஏ, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வருகை தந்தபோது,  அடையாளம் தெரியாத சிலர், அவர்மீது பீர் பாட்டிலில் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் குண்டை வீசி எரிந்தார். இது அந்த பகுதியில் வெடித்து சிதறியது. இதில் அதிர்ஷ்டவசமாக எம்எல்ஏ உள்பட பலரும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக எம்.எல்.ஏ அய்யப்பனைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டங்பபட்டது. திமுகவினர் உடனே பெட்ரோல் குண்டு எறிந்தவர்களை தேடி ஓடினார். இதுகுறித்து தகவல் அறித்த காவல்துறையினர் உடனே விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். எம்எல்ஏவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் எம்எல்ஏவுக்கு எதிரிகள் உள்ளனரா. அவர்கள் யாராவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.  அந்த பகுதியில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ள போலீசார், அதன் அடிப்படையிலும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து,  குண்டு வீசி விட்டு தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த குண்டு வீச்சு குறித்து 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ அய்யப்பன் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.