ஜெனிவாவில், 1,000 க்கும் மேற்பட்ட உழைக்கும் ஏழை மக்களும், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும் உணவுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், மணிக்கணக்கில் வரிசையில்  காத்திருந்தனர்
ஜெனீவாவில் இலவச உணவுப் பொட்டலங்களைப் பெறுவதற்காக சனிக்கிழமையன்று 1,000 க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றனர். இது பணக்கார நாடான சுவிட்சர்லாந்தில் கூட, உழைக்கும் ஏழை மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாலை 5 மணியளவில் வரிசையில் நிற்கத் தொடங்கிய மக்களுக்கு தன்னார்வலர்கள் சுமார் 1,500 பொட்டலங்களை விநியோகித்தனர். இந்த வரிசை தன்னார்வலர்களின் கட்டுப்பாடுகளையும் மீறி, 1கி.மீ. தொலைவுக்கு நீண்டிருந்தது. “மாத இறுதியில், என் பாக்கெட்டுகள் காலியாகிவிடும். நாங்களும்,  பில்கள், காப்பீடு, என எல்லாவற்றையும் செலுத்த வேண்டும்” என்று பகுதிநேர வேலை செய்யும் நிகரகுவாவைச் சேர்ந்த, ஜெனீவாவில் வசிக்கும் இங்க்ரிட் பெராலா கூறினார். “இப்போதைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால் இது ஒரு வாரத்திற்கான உணவு. அடுத்த வாரம் எனக்குத் தெரியாது.” என்றார்.
 
ஏறக்குறைய 8.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் தேசத்தில், 2018 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 660,000 பேர் ஏழைகளாக இருந்தனர் என்று கரிட்டாஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறியது. குறிப்பாக ஒற்றை பெற்றோர் மற்றும் குறைந்த அளவிலான கல்வி பெற்றவர்கள் வேலை இழந்த பிறகு வேறு வேலை தேட முடியவில்லை. 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.  அதாவது அவர்கள் சராசரி வருமானமான 6,538 சுவிஸ் பிராங்குகள் ($ 6,736) – இல் 60% க்கும் குறைவாக வாங்குபவர்களாக உள்ளனர். இது 2018 ஆம் ஆண்டில் ஒரு முழு நேர வேலைக்கான சராசரி சம்பளம் ஆகும். மூன்று பேரை கொண்ட ஒரு குடும்பம் வாழ, அதிக செலவு பிடிக்கும் நகரங்களில், ஜெனிவா இரண்டாவது இடத்தில் உள்ளதாக சுவிஸ் வங்கி யுபிஎஸ் கணக்கிட்டுள்ளது. ஜூரிச் இதற்கு அடுத்த நிலையிலேயே உள்ளது. சராசரி வருமானங்களும் அதிகமாக இருந்தாலும், வாழ போராடும் நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இது சிறிதளவே உதவுகிறது.
“இன்றைய நிலையை பலரும் அறிந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் இதை உங்கள் கண்களால் பார்ப்பது என்பது  வித்தியாசமானது” என்று ஜெனீவா ஒற்றுமை கேரவன் என்ற உதவி குழுவின் தலைவர் சில்வானா மேட்ரோமாட்டியோ கூறினார். “இது எங்கள் நாட்டில் நடக்கும் நிகழ்வாக இருக்க முடியாது” என்று மக்கள் கண்ணீர் விட்டனர்.  ஆனால் அது இங்கேதான் நடந்தது. கோவிட் -19 எல்லாவற்றையும் வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இது நல்லது. ஏனென்றால் நாங்கள் இவர்களுக்கு உதத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.  ஏனென்றால் அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு சேவையளிக்கும்  தொழிலாளர்கள். “கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பில் நேர்காணல் செய்யப்பட்ட உணவு பெற்ற பெரும்பாலானவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள். மற்றவர்கள், ஏற்கனவே சட்டபூர்வமான நிலையை அடைந்தவர்கள். அதாவது, சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் அல்லது தஞ்சம் கோரியிருப்பவர்கள்” என்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெனீவாவின் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள், பரிசோதனை செய்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் 3% மட்டுமே. அதுவும், ஏழை மற்றும் நெரிசலான வீடுகளில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. “உலகின் பணக்கார நகரங்களில் ஒன்றான ஜெனீவாவில், எப்போதுமே மக்கள் ஆபத்தான முறையில் வாழ்ந்து வருகிறார்கள், குறிப்பாக வீட்டுப் பணியாளர்களாக, விவசாயத்தில், கட்டுமானத் தளங்களில் அல்லது ஹோட்டல்களில் பணிபுரியும் அனைத்து மக்களும், ஒரே இரவில் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர்.”என்றார். தன்னை பெர்னாண்டோ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு சட்டவிரோதமாகக் குடியேறியவர், நெருக்கடியின் போது தனது உணவக வேலையை இழந்ததாகவும், ஊதியம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார். “இந்த உதவியைப் பெறுவதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நிலைமை எனக்கு மாறினால், அவர்கள் எனக்காகச் செய்கிற அதே காரியத்தைச் செய்ய நான் உறுதியளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இல்லாதிருப்பவர்களுக்கே மற்றவர்களுக்கு கொடுக்கும் மனம் வாய்த்துள்ளது. அது கொரோனா காலத்திலும்!
தமிழில்: லயா