சென்னை: பிப்ரவரி 10ந்தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர்  அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி  வருகிறது. கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், தற்போது அன்புமணி பொதுக்குழு மற்றும் செயற்குழு நிர்வாகிகள் ஆதரவுடன் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றி உள்ளார். மேலும், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலு இணைந்துள்ளார். இதற்கிடையில், கட்சி மற்றும் சின்னம்  தொடர்பாக தந்தை மகனுக்கு  இடையே உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், வரும் சட்டமன்ற தேர்தலுக்காக,  இரு தரப்பினரும் தனி தனியாக விருப்பமனுக்களும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி தரப்பு பாமக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும். இளைஞரணித் தலைவர் முனைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

பாமக இளைஞரணியின் வளர்ச்சி, ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். பாமக இளைஞரணியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]