மேஷம்

உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு அரசாங்க நன்மை கிடைக்குமுங்க. கர்ப்பப் பை சம்பந்தப்பட்ட பிரச்சினையோ அல்லது சிறுநீரகக் கோளாறோ இருந்தால் அது ‘சூ மந்திரக்காளி’ போட்ட மாதிரி சரியாகும்.  வாழ்க்கைத் துணையின் புத்திசாலித்தனமான தீர்மானங்கள் அவருக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும். குறிப்பா உங்களுக்கு. தந்தைக்கு நன்மை ஒன்று இந்த வாரம் நடக்கும். அவரது மகிழ்ச்சி உங்களுக்குப் பலன் அளிக்கும். அறுவை சிகிச்சையோ என்று பயமுறுத்திய பிரச்சினைகள்கூட வெறும் மாத்திரை மருந்தில் குணமாகும்.

ரிஷபம்

காதலுக்குப் பச்சை விளக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாலினத்தினர் உங்களுக்கு மிகவும் உதவுவாங்க. சகோதர சகோதரிகளிடம் அளவோடு வைச்சுக்குங்க. இல்லாட்டி பிரச்சினையாகும். அப்பாவுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும்.. அல்லது அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டு உங்க உதவியால் சரியாக வாய்ப்பு உள்ளது. எதுவாயினும் நீங்க அடங்கிப் போகணுங்க. சுப நிகழ்ச்சிகளுக்குக் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேணும். அவசரப்பட்டால் எப்டிங்க? ஆரோக்யத்தை நல்ல முறையில் பார்த்துக்கணுங்க. முக்கியமாய் முழு கவனத்துடன் வாகனம் ஓட்டுங்க.

மிதுனம்

சந்தோஷம், உற்சாகம், உல்லாசம் போன்ற காரணங்களுக்காக ஏகப்பட்ட செலவுகள் செய்து ஜாலியாய் இருப்பீங்க. நிறைய லாபங்களும் நன்மைகளும் ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமானங்களும் வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு, மனோதிடம் அதிகரிக்கும், குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் காண வெளிநாடு போவீங்க. உத்யோகம் பார்க்குமிடத்தில் சின்னதாய் சொதப்புவீங்க. ஆனால் அதன் விளைவு நீங்க நினைச்ச அளவு பயங்கரமா இருக்காது.  குழந்தைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் உண்டாகும்.

கடகம்

புதிய உத்யோகத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. தாயாரின் உடல் நிலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு தகுந்த சிகிச்சை மட்டுமின்றி குருப்ரீதியும் உதவும். வாகனம் வாங்க இன்னும் கொஞ்சமே கொஞ்சகாலம் பொறுத்தால் நல்லது. மாணவர்கள் சற்றுத் தடுமாறி.. பின் நிலைக்கு வந்துடுவீங்க. குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள்… உத்யோகம் கிடைக்கும். அதீதக் கோபம் வருதுங்க. ஜாக்கிரதை. கட்டுப்படுத்திக் குங்க.  காலில் சக்கரம் கட்டிக்கிட்ட மாதிரி ஊர் ஊராய்.. நாடு நாடாய்ச் சுற்றுவீங்க. புதிய உத்யோகம் நல்ல முறையில் கிடைக்கும்.

சிம்மம்

செலவுகள் சட்டென்று கட்டுப்பட்டு வயிற்றில் பாதாம்  பால் வார்க்கும். நண்பர்களிடம் பல மைல் தொலைவுக்குத்  தள்ளி நில்லுங்கப்பா. அதிக உரிமை எடுக்காதீங்க. அதிகச் சலுகையும் குடுக்காதீங்க. நண்பர்கள் என்று நினைத்து ஏமாந்து பகைவர்களிடம் ரகசியங்களைப் பகிர வாய்ப்பு இருக்கு. எனவே எல்லோரிடமும் கவனமாய் இருந்துட்டா வம்பே இல்லை பாருங்க! சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்கு உங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைக்கும். ஆரோக்ய விஷயத்தில் கவனமாய் இருக்கும் இந்த ராசிக்காரங்களுக்கு நிச்சயமாய்ப் பிரச்சினை ஏதும் வராதுங்க.

சந்திராஷ்டமம்: 11.05.2018 முதல் 13.05.2018 வரை

கன்னி

தன்ம்பிக்கை அபரிமிதமாய் உங்களை நிமிரச்செய்யும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும்படி மனசைத் தயார் நிலையில் வைத்திருப்பதால் பிரச்சினை உங்களை அண்டாது. நண்பர்களுக்கு நீங்க உதவி செய்வதுபோலவே உங்களுக்கு அவங்களும் உதவுவாங்க. பேச்சினால் நன்மையும் லாபமும் வரும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சிறிய கவலைகள் மற்றும் டென்ஷன்கள் குறித்து மனதைப்போட்டு உழப்பிக்காதீங்க. மிக விரைவில் சரியாகும். ஆரோக்யத்தில் ஏற்பட்டிருந்த அத்தனை பிரச்சினைகளும் அடுத்தடுத்து சரியாகிவிடும். டோன்ட் ஒர்ரி.

சந்திராஷ்டமம்: 13.05.2018 முதல் 15.05.2018 வரை

துலாம்

குழந்தைகளுக்கு நல்ல காலம் வந்தாகிவிட்டது. கோயில் விசிட்கள் ஜமாய்ப்பீங்க. பெண்களுக்கே உரிய சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்பதுடன் விரைந்து சரியாகும். வாகனம் வாங்குவீங்க. ஜமாயுங்க. அனேகமாக வெளிநாட்டு வாகனம்தான்- தாயாரை அன்புடன் கவனிங்க. சகோதர சகோதரிகளிடம் அன்புடனும் ஆசையாகவும் இருங்களேன். குறைஞ்சா போயிடுவீங்க. உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகளோ அல்லது  ஸ்பெக்ஸ் போட வேண்டிய அவசியமோ நேரலாம்.

சந்திராஷ்டமம்: 15.05.2018 முதல் 17.05.2018 வரை

விருச்சிகம்

எங்கும் எதிலும் அவசரப்படாதீங்க. குறிப்பாய்ப் பெரிய தீர்மானங்கள் எடுக்க வேண்டி வந்தால் அதைத் தள்ளிப்போட முடியுமா என்று மனதார யோசிங்க. முன்பு கன்னாபின்னாவென்று அலைக்கழித்த ஆரோக்யம் இப்போது அப்பாடா வென்று சாய்ந்து உட்கார்ந்து நிம்மதிப்பெருமூச்சு விடுமளவுக்கு சரியாகும். நண்பர்கள் பெருமளவில் உதவுகரமாய் இருப்பார்கள், அவர்களுக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் வந்து சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பார்கள்.  ஒரு வேளை அதற்கு நீங்களும் காரணமாய் இருக்கக்கூடும். எனவே மனப்பூர்வமாய்ச்செய்யுங்கள்.

தனுசு

கோபமாகவும், காரசாரமாகவும் பேச வேண்டிய சந்தர்பங்களில் சற்றே அடக்கி வாசிங்க. உங்களையும் மீறி வார்த்தைகள் வந்துடப்போறது. ஜாக்கிரதைங்க. எதை எடுத்தாலும் நிதானப்போக்கும் தடையும் தாமதமும் இருக்கு என்று டென்ஷன் ஆறவங்க அனுமனைத் துதியுங்க. மற்ற மதத்தினர் சனிக்கிழமையில் ஏழை களுக்கு உணவளித்து.. பாத அணிகளும் ஒரு குடையும் வாங்கிக் கொடுங்க. சரியாகும். குடும்பத்தில் கசமுசவென்று சின்னச்சின்னதாய் வாக்குவாதங்கள் நடக்கும். அதை உங்கள் உயர் குணத்தால் பெரும்போக்காக்கி விடுங்களேன்.

மகரம்

குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று யாராவது உங்களை டெம்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. காதிலேயே போட்டுக்காதீங்க. அவங்க பின்னால் போய் மாட்டிக்கொண்டால் பிற்பாடு பெரிய ஆபத்துதான ஜாக்கிரதை. குறிப்பாய் நண்பர்கள் பகைவர்களாவார்கள். அதற்கு இது காரணமாய் இருந்தால்…. அதனால் பரவாயில்லை. நீங்க தப்பிச்சுடுவீங்க. திருமணம் செய்து கொள்ள வேளை வரவில்லை எனில் சந்தோஷமாய் வெயிட் பண்ணுங்க. இப்ப நடந்தால் அவ்வளவாக நல்லதில்லைங்க. வாகனம் வாங்குவீங்க. நல்ல வாகனமாய் அமையும்.

கும்பம்

நிறைய திடீர் செலவுகள் வரக்கூடும். அதனால் என்ன. பெரும்பாலும் நல்ல செலவுங்கதான். இல்லாட்டி அருமையான முதலீடாய் இருக்கவும் வாய்ப்பு இருக்கு. வருமானங்களும், லாபங்களும் நத்தை வேகத்தில்தான் இருக்கும். என்ன செய்ய? கொஞ்சம் பொறுங்கள். சரியாயிடும். தந்தைக்கு ஏற்படம் உபாதைகள் பற்றி டென்ஷன்  வேண்டாம். அதிகபட்சம் வயிற்று உபாதையாய் இருக்கும். அதுவும்  அநாயாசமாய்ச் சரியாகிவிடும். நீங்களும் கவலைப்பட்டு அந்தக் கவலையை அவர் மனசிலும் ஏற்றிவிடாதீங்க. அம்மாவுக்குப் புகழ் வரும்.

மீனம்

டக் டக்கென்று  அதிருஷ்ட தேவதை எட்டிப்பார்ப்பதோடு உங்கள் முதுகில் அமர்ந்து சவாரியும் செய்வாங்க. பேச்சில் சுள்ளென்று அனல் அடிக்காமல் பார்த்துக்குங்க. பேசுவதெல்லாம் பலிக்கும். எனவே நல்ல வார்த்தைகளை மட்டுமே உதிர்க்கணும்னு கங்கணம் கட்டிக்குங்க. சகோதர சகோதரிகளுக்குப் புகழ் நிறைய வரும். கலைத்துறையில் உள்ளவங்களுக்குப் புதிய வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்குக் காத்திருந்தீங்களா? எனில் இதோ வந்தாச்சு. அப்பாவின் செல்வாக்கு காரணமாய் உங்களுக்குப் புகழ் வரும்.