சென்னை:  கிண்டி அருகே உள்ள சென்னை ஐஐடியில், எரிந்த நிலையில் மாணவர் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவரை எரித்துக்கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதீய பாகுபாடு காரணமாக சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  மேலும் ஒரு பயங்கரம் ஐஐடி வளாகத்தில் அரங்கேறி உள்ளது.  அங்குள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு கிடந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அந்த மாணவர் கேரள மாநிலத்தச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பதும், இஸ்ரோவில் பணியாற்றி வரும் விஞ்ஞானி ஒருவரின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது. உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளது.

இந்த மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரின் அறைக்குச் சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவருடன் தங்கி வரும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையில் இருந்து 11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் கிடைத்தது அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து அந்த மாணவர் தானாகவே தீ வைத்துகொளுத்திக்கொண்டு தற்கொலை செய்திருக்லாம் என்று கூறப்படுகிறது. ஆனால்,  ஒருவர் உடலில் தீப்பற்றி எரியும்போது, அவர் போடும் கூச்சல் சத்தம் மற்றவர்களுக்கு கேட்கவில்லையா என்றும் சந்தேகம் எழுப்பப்டுகிறது. இதனால், இது தற்கொலைதானா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவர் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பம் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.