சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரம்: அரசு உயரதிகாரிகள் மற்றும் தொழில்துறையினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதில், பரந்தூர் விமான நிலையம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என்று தொழில்துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் முதல்வர் விஜய். பரந்தூர் விமான நிலையம் திட்டத்தால் 12 கிராமங்கள் மற்றும் நீர்நிலைகள், விவசாய நிலயங்கள் பாதிக்கப்படுகிறது. அதனால், இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தவெக தலைவர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், விஜய் முதல்வரான நிலையில்வ, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய், அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு சுமார் 5,000 ஏக்கர் நிலமும் தேர்வுச் செய்யப்பட்டு பணிகளை துரிதப்படுத்தியிருந்தது. விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூருக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அத்துடன், தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பெரும்பாலான நீர்நிலைகளை உள்ளடக்கிய பரந்தூரில் விமான நிலையம் அமையும் பட்சத்தில் மழைக்காலங்களில் அருகில் இருக்கும் கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில், கடந்த 2025- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் மற்றும் விவசாயிகளை தற்போதைய முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்திருந்தார். அப்போது பேசிய விஜய், “தமிழ்நாட்டில் விளை நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பாதிக்கும் வகையில் எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்தும், அந்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்தும் துறை சார்ந்த அரசு உயரதிகாரிகளுடன் நேற்று (மே 15) ஆலோசனை மேற்கொண்டார்.
ரந்தூர் விமான நிலையத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதன் காரணமாக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் மேற்கொண்டு ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியின் நிலை, அப்பகுதி கிராம மக்களின் தற்போதைய மனநிலை, சுற்றுச்சூழல் அறிக்கை கூறுவது என்ன? என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை முதலமைச்சர் விஜய் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் இருந்தாலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது, இதனை தமிழ்நாடு அரசு கைவிடக் கூடாது என்ற கோரிக்கையையும் தொழில்துறை சார்ந்தவர்கள் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]