பேப்பர் இட்லி
சிறுகதை
பா.தேவிமயில் குமார்
“அம்மா, எப்படியிருக்கிங்க, பாப்பாவும், அவ வீட்டுக்காரரும் எப்படியிருக்காங்க ?”
“பாரதி, நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம், நீ எப்படிப்பா இருக்க ? ஏன் ரெண்டு நாளா போன் இல்லை ?”
“கொஞ்சம் வேலைம்மா, அதான், அப்புறம் உங்க உடம்புக்கு தேவையான மாத்திரைலாம் எடுத்துக்கிறிங்களா ? ஹாஸ்பிடல் போறிங்களா ?”
“ம், எல்லாம் சரியா இருக்குப்பா, என் உடல்நிலையும் ஆரோக்கியமா இருக்குப்பா.”
“அப்புறம், நம்ம தரகர் ஒரு பொண்ணு ஜாதகம் கொண்டு வந்தார்ப்பா, பொண்ணு போட்டோவை உனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பறேன், உனக்கு பிடிச்சிருக்கானு சொல்லுப்பா, ஜாதகம் சரியா இருக்கு, மரியாதையான குடும்பம், பொண்ணும் நல்ல நிறம்” என சொன்னார்கள் பாரதிகுமாரின் தாய் வள்ளியம்மாள்.
“அம்மா, என்னை மன்னிச்சிடுங்க, நானும் உங்ககிட்ட ஆறு மாசமா சொல்ல நினைச்சேன், ஆனா சொல்ல முடியல, இங்க அமெரிக்காவுல எங்கூட வேலை செய்யுற லூனாவை விரும்புறேன் இந்த முறை நான் வரும்போது அழைச்சிட்டு வர்றேன்.”
…….(வள்ளி அம்மாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை)
“அம்மா, அம்மா,”
“ம், சொல்லுப்பா, நான் என்ன சொல்ல முடியும் ? கூட்டிட்டு வா, பேசலாம்” எனக் கூறி போனை துண்டித்தாள்.
வள்ளி அம்மாவின் கணவர், பாரதியும் அவன் தங்கை நிதியும் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார், அதன் பின் அவருடைய பென்ஷனை வைத்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றினார் வள்ளி. பெண் நிதிக்கு அடுத்த தெருவிலே வரன் அமைந்து விட்டதால் அடிக்கடி வந்து பார்த்துப் போவாள். சிறியதாக சென்னையில் ஒரு வீடு வாங்கி விட்டான் பாரதி, அதில்தான் அம்மாவைக்குடி வைத்துள்ளான் பாரதி. தங்கைக்கு நல்ல வாழ்க்கை, வீடு, அவனுக்கு நல்ல வேலை, என வாழ்க்கையை மிக அழகாக மாற்றினான் பாரதி. இது வள்ளி அம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
பாரதி தன் காதல் விஷயத்தை சொன்னதும், அதற்கு பிறகு ஒரு மாதம் வரை, அம்மா, மகன் இருவரும் சரிவர பேசிக் கொள்ளவில்லை.
ஒரு மாதம் சென்ற நிலையில், “அம்மா, நாளைக்கு நானும் லூனாவும் வர்றோம்மா,” என்று கூறினான் பாரதி.
வெள்ளைக்காரப் பெண்ணுடன் வருவது பார்ப்பவர்களுக்கும், உறவினர்களிடமும் பேசும் பொருளாக இருக்கும் என நினைத்துக் கொண்டே அவர்கள் இருவருக்கும் மதிய உணவு தயாரித்தார் வள்ளி அம்மாள்.
அழைப்பு மணி கேட்டு கையில் ஆரத்தி தட்டுடன் சென்ற வள்ளி அம்மாவுக்கு மயக்கம் வராத குறை, சமாளித்துக் கொண்டு வரவேற்றார். நிதியும், அவள் கணவனும் பாரதியைப் பார்க்க வந்திருந்தார்கள், அவர்களும் நம்ப முடியாத காட்சியைப் போல பார்த்தனர்.
“லூனா, நீ அந்த பால்கனி அறையில் தங்கிக் கொள்” என ஆங்கிலத்தில் கூறிவிட்டு அம்மாவிடம், திரும்பி
“அம்மா நாங்க ஒரு வார லீவில் வந்திருக்கோம், அதனால உன் மருமகளிடம் என்ன பேசணுமோ பேசிக்க,”
“நிதி உனக்கும்தான், உன் அண்ணிக்கிட்ட பேசிப்பழகு” என்றான்.
பின், “மாப்பிள்ளை நல்லாயிருக்கிங்களா ?” என்றான்
“ம், நல்லாருக்கோம் மாமா, இது வரை நான் உங்களை எதுவும் கேட்டதில்லை, ஆனா, இப்ப, இது மாதிரி,”
“சாரி, தப்பா எடுத்துக்காதிங்க, மாமா எனக்கொண்ணும் பிரச்சினையில்ல, மத்தவங்களை, அப்புறம் சொந்தத்தை எல்லாம் எப்படி சமாளிப்பிங்க ?”
உடன் நிதி கோபத்துடன்,
“ஏங்க அவர் சம்பாதிக்கிறார், கேட்கறத்துக்கு அப்பா இல்ல, அம்மா ஒரு பூச்சி, தோ, நான் அடுத்த வீட்டுக்குப் போய்ட்டேன், அதனால அவரையார்க் கேட்க முடியும் ? அப்படின்னுதான், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கார்” என கோபத்துடன் படபடவெனப் பேசினாள்.
உடன் அங்கு வந்த அம்மா,
“நிதி, மாப்பிள்ளை, இது எனக்கு 100 சதவீதம் பிடிக்கலை, ஆனாலும் நான் என்ன செய்ய முடியும் ? அதனால யார் எப்படிக் காரி துப்பினாலும், கேலி பேசினாலும் கல்யாணம் நடக்கணும் இல்லையா ?” என்று சொன்னபோது கண்ணில் நீர் முட்டியது.
அப்போது பாரதி, “நீங்க எல்லோரும் வெளி நாட்டுப் பெண் என்றதும் பிடிக்கவில்லை என்றாலும் சரின்னு சொல்லிட்டு இருந்திங்க, ஆனா வந்தப் பொண்ணு வெள்ளைக்கார இனம் இல்லை, பதிலாக கறுப்பினம் சார்ந்த பொண்ணு அப்படின்ன உடனே உங்களுக்கு தாங்க முடியல அதான் உண்மை இல்லையா ?”
“ஆமாம், பாரதி அதுவும் ஒரு காரணம்,” என்றார் அம்மா.
“ஆமாண்ணா, அதுதான் முக்கியக் காரணம், நாளைக்கு நீ கல்யாணம் பண்ணிட்டு போயிடுவ, எங்களை சொந்தக்காரங்க முன்ன விட்டுப் பின்னப் பேசுவாங்க” என கண்ணீர் விட்டாள் நிதி.
சற்று நேரம் அமைதியாக இருந்த பாரதி, “அம்மா நீயும் அப்பாவும் கவிஞர் பாரதியின் ரசிகர்கள், அவர் பாடலை நீ பாடும்போது நான் மெய் மறந்து கேட்பேன், அவர் “காக்கை, குருவி எங்கள் ஜாதி” என்று பாடியிருக்கிறார், ஆனா ஒரு மனுஷியா கூட லூனாவைப் பார்க்காம கறுப்பினம்னு பார்க்கிறிங்க ?”
“வெள்ளைக்காரங்கள இங்கிருந்து வெரட்டினாலும், இன்னும் ‘வெள்ளை நிற’ மோகத்தை விரட்ட முடியல, அதான் இந்த பிரச்சனை, இல்லையா ?”
“லூனா முகம் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும், அவர்களின் அலங்காரம் உங்களுக்குப் பிடிக்காதுதான் அதற்கு என்ன செய்ய முடியும் ? நானும் அவளும் கடந்த ஒரு வருடமாக விரும்புகிறோம்.”
“நீங்கள் நினைப்பது போல அவள் ஒன்றும் என்னைப்போல சாதாரண வேலை செய்யும் பெண் இல்லை, நான் வேலை செய்யும் கம்பெனி போல பத்து பெரிய கம்பெனிகளுக்கு உயர் அதிகாரி அவள், அவளுடைய பூர்வீகம் ஆப்ரிக்கக்கண்டத்தின் ஒரு நாடு, அது மட்டுமில்லாமல் நம் இந்தியக் கலாச்சாரத்தின் மீது ரொம்ப நம்பிக்கை கொண்டவள், இவ்வளவுக்கும் மேலாக ரொம்ப எளிய வாழ்க்கையை விரும்புகிறவள், அந்த ஒரு விஷயம்தான் எங்கள் இருவரையும் இணைத்தது.”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மூவரும் எந்த பதிலும் பேசவில்லை.
“சரி, என்னால் என்ன செய்ய முடியும் ? உன் விருப்பம் என வள்ளி அம்மாள் சொல்லிவிட்டு, சாப்பிட வாங்க” என அனைவரையும் அழைத்தாள்.
அறையிலிருந்து லூனாவும் வந்தமர்ந்தாள், அப்போது மூவரும் அவளையேப் பார்த்தார்கள், தடித்த உதடு, கரு நிற மேனி, பல சிறிய பின்னல்கள் இணைந்த முடியலங்காரம் என அவளைப் பார்த்து மூவரும் பெருமூச்சு விட்டனர்.
அன்று போன நிதி இடையில் ஒருமுறை கூட அண்ணனைப் பார்க்க வரவில்லை, வள்ளி அம்மாவும் அந்தப் பெண்ணுடன் எதுவும் பேசவில்லை, ஒரு வாரம் முழுதும் இறுக்கமான சூழலே நிலவியது.
பாரதி கிளம்பும் அன்றுக் காலை நிதி தன் கணவனுடன் வீட்டிற்கு வந்தாள். அன்று லூனா புடவை கட்டி, பொட்டிட்டு, பூ வைத்து இருந்தாள், பின் பாரதியிடமும் மற்றவர்களிடமும், ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள், “வணக்கம்” என கைகுவித்து,
“இந்தியாவில் தீண்டாமை என்றும் எங்கள் அமெரிக்காவில் நிறபேதம் என்றும் பிரச்சினைகள் இருக்கிறது, அது உடனே சரியாகாது என தெரியும், நீங்கள் வெள்ளைத்தோலாக என்னை எதிர்பார்த்தீர்கள், அது உங்களுக்கு ஏமாற்றம்தான், இந்தியரின் குடும்பம், உறவுமுறைகளை மதிப்பவள், எனக்கு நிறைய இந்தியத் தோழர்கள் அங்கே உண்டு, அதனால் உங்களின் கலாச்சாரம் பற்றி நன்கறிவேன்.
எனக்கு இங்கு வந்து உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஒரு வாரம் இருந்தது மிகவும் மகிழ்ச்சி, அம்மா, நிதி, அண்ணா, உங்களுக்கு பிடிக்காமல் நான் பாரதியை மணம் செய்வது ‘நீரில்லாத ஆற்றில் நீச்சல் அடிப்பது போல’ ஆகும், நீங்கள் உங்கள் சமூகத்தில் அவருக்கு ஒரு நல்லப் பெண்ணைப் பாருங்கள், நன்றி” எனக் கூறிக்கண் கலங்கினாள்.
“பின் அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க, நான் வருகிறேன்” என வள்ளி அம்மாவின் காலில் விழுந்தாள் லூனா.
“நல்லாரும்மா, என் பையன் வழிதான் என் வழி, நீ பேசிய பிறகு என் மன இறுக்கம் குறைஞ்சிடுச்சு, நீதான் என் மருமகள்” என பேசினாள்.
பின் நிதியும் அவள் கணவரும் “உலகமே மாறிக் கொண்டு வருகிறது மாற்றத்தை ஏற்க வேண்டும்” எனக் கூறினார்கள்.
நிதியை ஒரு தோழிபோல லூனா ஆரத் தழுவிக்கொண்டாள்.
பின், அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட அமர்ந்தனர்,
“டேய் பாரதி போய்ட்டு உடனே லூனாவையும், அவங்க சொந்தக் காரங்களையும் கூட்டிட்டு வா, ஊரைக் கூட்டி ஜாம், ஜாம்னு கல்யாணம் செய்யணும், நான் பூரண சம்மதம் சொன்னேன்னு லூனா பெத்தவங்க கிட்ட சொல்லிடு சரியா ?”
உடன் நிதி, “ஆமாண்ணா, யார் எது வேணாலும் பேசட்டும், லூனாதான் நம் வீட்டு லட்சுமி” என சிரித்தாள்.
சாப்பாட்டின் இடையில் லூனா, “மாம், ஐ வான்ட் பேப்பர் இட்லி அண்ட் ஐ லைக் தட் டிஸ்” எனக் கேட்டாள்.
இட்லி, சாம்பார், சட்னி சாப்பிடும் போது… வேறு என்ன பேப்பர் இட்லி என வள்ளி அம்மாக் குழம்பியபோது விடுவிடுவென லூனா சமையலறை சென்று தோசைக்கல்லை எடுத்து வந்து காண்பித்தாள், “திஸ் டிஸ்” என்றாள்.
“ஓ, தோசைக்கு நீ வச்ச பேர்தான் பேப்பர் இட்லியா ?” என சிரித்தவாறே நிதி உள்ளே சென்று லூனாவிற்காக நெய் தோசை, முட்டை தோசை என செய்து வந்து அசத்தினாள்.
அங்கே ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது. இதைப் படிக்கும் நமக்குள்ளும் ஏதோ ஒரு மாற்றம் ஆரம்பமாகுமென்று நினைக்கிறேன்.