விருதுநகர்: பங்குனி உத்திரம்  மற்றும் பங்குனி மாத பவுர்ணமியையொட்டி,  சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்குள்ள கோவிலில்  அமாவாசை, பவுர்ணமி போன்ற முக்கிய தினங்களில் மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.  அதன்படி, ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி, அமாவாசை, பிரதோசம் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, 4 நாட்கள் பக்தர்கள் மலைக்கு சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வருகிற 22-ந்தேதி  அன்று மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.  அதோடு பங்குனி மாத பவுர்ணமி முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக 22ந்தேதி முதல் 25ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்ப்பதோடு, ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது, இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.