ரதோதேரோ, பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ள்ள ரதோதேரோ என்னும் சிறு நகரில் சுமார் 900க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச் ஐ வி தொற்று உள்ளது கண்டறியப்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
உலகெங்கும் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நோய் எச் ஐ வி கிருமித் தொற்றால் உண்டாகிறது. உலகில் அதிக அளவில் எச் ஐ வி தொற்று உள்ள நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஐநா சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு சிறு நகரம் ரதோதேரா ஆகும். இங்குச் சமீபத்தில் எச் ஐ வி தொற்று குறித்த சோதனை நடந்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்த சிறு நகரில் சுமார் 1100க்கும் மேற்பட்ட எச் ஐ வி நோயாளிகள் உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதில் சுமார் 900 பேர் 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆவார்கள்.
இந்த தகவலை கடந்த ஏப்ரல் மாதம் குல்பகர் ஷேக் என்னும் உள்ளூர் பத்திரிகையாளர் வெளியிட்டார். இதையொட்டி நகர மக்கள் பலரும் சோதனை செய்யப்பட்டதில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
பல மருத்துவர்கள் பணத்தைச் சேமிப்பதற்காக, ஒரே ஊசியைப் பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தியதே எச்.ஐ.வி தொற்றுக்கான முக்கிய காரணம் என அம்மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் திட்ட மேலாளர் சிகந்தர் மெமோன் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி அந்த பகுதியில் மருத்துவமனை வைத்துள்ள குழந்தைகள் மருத்துவரான முசாபர் கங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மருத்துவரும் எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில் வேண்டுமென்றே அவர் நோய்த் தொற்றைப் பரப்பினாரா என்னும் கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றத்தை முசாபர் மறுத்துள்ளார். அந்நகரில் சுமார் 5 இடங்களில் தற்போது மக்கள் அனைவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நோயாளிகள் அதிகளவில் வருவதால் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.