இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு வெற்றி பெற்று உள்ளது.
அந்நாட்டில் அண்மையில் நடைபெற்ற மேலவை தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க( கூட்டணி வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ராஸா கிலானி தோற்கடித்தார்.
இந்த தோல்வி, பிரதமா் இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரதமா் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுக்க அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தார்.
தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இன்று பாகிஸ்தானின் தேசிய அவை கூடியது.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், 342 உறுப்பினர்களை கொண்ட தேசிய சபையில் 178-வாக்குகள் பெற்று அரசுக்கு பெரும்பான்மையை இம்ரான் கான் காட்டினார். பாகிஸ்தான் தேசிய சபையில் பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் தேவை என்ற நிலையில் அதை விட கூடுதலான ஆதரவுடன் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.