சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வந்த வெளிப்புற விளையாட்டு மையம்  பயனர்களுக்காக பிப்ரவரி 6ந்தேதி திறந்த வைக்கப்பட்டது.

ரயில்வேக்க வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து,  ஒப்பந்தப்புள்ளியை சென்னை ரயில்வே கோட்டம் கோரியது.

ரயில் பயணிகள் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்கக் கூடிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு திட்டங்களை வழங்கும் விதமாக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் இருக்கும் காலி இடங்களை வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனபடி,  டேபிள் டென்னிஸ், பூப்பந்து, ஜிம்னாசியம், கூடைப்பந்து, ஷட்டில், கபடி, கேரம், செஸ், வாலிபால், யோகா, ஸ்னோ பவுலிங், கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, குத்துச் சண்டை, பளு தூக்குதல், பில்லியர்ட்ஸ் போன்ற பலதரப்பட்ட உள், வெளி அரங்க விளையாட்டுகளை நடத்த அனுமதிக்கப்படும். தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மட்டுமே இந்த விளையாட்டு மையப் பணியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான  பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில்,  ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம்  நேற்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  ரயில்வேதுறை இடத்தை முழுமையாகப் பயன்படுத்துதல் மற்றும் சமூக நலன்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தில் தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டத்தில் வேளச்சேரி ரயில் நிலைய வெளிப்புற பகுதியில் புதிய விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னைக் கோட்ட கூடுதல் மேலாளா் தேஜ்பிரதாப் சிங் விளையாட்டு மையத்தைத் திறந்து வைத்தாா். ஐந்தாண்டு உரிம ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.12.07 லட்சம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும். நிலையான வருவாயை ஈட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மையத்தில் பாக்ஸ் கிரிக்கெட், பிக்கிள்பால், ஸ்கேட்டிங் தளம், சிலம்பம் பயிற்சிக்குரிய பகுதிகள் உள்ளன. இளைஞா்கள் உடல் பயிற்சிக்கும், பொழுதுபோக்குக்கும் ஏற்ற வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுபோன்ற விளையாட்டு மையம் வேளச்சேரி ரயில் நிலையப் பகுதியில் முதல்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது என  குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]