சென்னை: ஓசூர் டாடா தொழிற்சாலையில் வெளி மாநில பெண்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், டாட்டா நிறுவனமும் இணைந்து, தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை அறிவித்து உள்ளது.
அதன்படி, 6 மாவட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதில் 18வயது முதல் 21 வயது உடைய பெண்கள் விண்ணப்பித்து உடனே பணியானை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஆகஸ்ட் 29 மற்றும் 30ம் தேதிகளில், ஆறு மாவட்டங்களில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையங்களில் முகாம் நடக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது புதிதாக ஐடிஐ தேர்ச்சி பெற்ற 18-21 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்படுவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் அமைந்துள்ள டாடா நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் ஆலைக்கு தேவையான காலி இடங்களை நிரப்ப தமிழக பெண்கள் பணிக்கு சேராத நிலையில், டாடா நிறுவனம் உத்தரகாண்ட் உள்பட 4000 உத்தரகண்ட் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசும் கடுமையாக சாடியிருந்தார். அவரது அறிக்கையில், தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இன்னொரு மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு டாட்டா நிறுவனத்திற்கு உரிமையும் இல்லை. இந்த நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாட்டா நிறுவனத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக, டாட்டா மின்னணு நிறுவனம் தமிழ்நாட்டில் ஆலை அமைத்தால், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்பதால் தான். ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசுடன் இணைந்து டாடா நிறுவனம் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை அறிவித்து உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம், தனது எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் மற்றும் அசம்பிளி ஆலை செயல்பட்டு வருகிறது. . உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் இந்த ஆலையில், பணிகள் தொடங்கி உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முதல் கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்கு தேவயைன மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்தி உள்ளது. அதாவது, 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைத்துள்ளது. இதன்மூலம் . 50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், அசெம்பிளிங் வேலைக்கு இளம்பெண்களை வேலைக்கு எடுத்து வருகிறது. 18வயது முதல் 21 வயது வரையிலான இளம்பெண்களை தேர்வு செய்து, அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகளுடன் பணி வாய்ப்பும் வழங்கி வருகிறது.
அதாவது பணிக்கு, பெண் ஊழியர்களுக்குத் தகுதி வரைமுறையில் 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் NAPS-க்கு தகுதியானவர்கள். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது ITI டிப்ளோமாக்கள் கொண்டவர்கள் NATS-க்கு தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது.
ஆனால், இந்த பணியில் சேர தமிழக பெண்களிடையே போதைய வரவேற்பு இல்லாத நிலையில் வெளிமாநில பெண்களை தேர்வு செய்து வருகிறது.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை, தேசிய திறன் பயிற்சி திட்டம் (NATS) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் (NAPS) ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், டாடா குழுமம் உத்தரகண்ட் மாநிலத்தின் திட்டமிடல் துறைக்கு இந்த 4000 பெண் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்த விபரத்தைத் தெரிவித்தது. உத்தரகண்ட் அரசின் தலைமை அமைச்சர் புஷ்கர் தாமி தலைமையிலான அரசு அம்மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தற்போதைய முயற்சிகளுக்கு டாடா குழுமம் உதவி செய்துள்ளது.
இந்த 4000 பெண் ஊழியர்களைத் தமிழ்நாட்டின் ஓசூர் மற்றும் கர்நாடகாவின் கோலார் ஆகியவற்றில் உள்ள டாடாவின் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
தகுதியைத் தாண்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஷாப் ஃப்ளோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக (shop floor technicians) நியமிக்கப்படுவார்கள். மேலும் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்குச் சம்பளத்திற்குக் கூடுதலாக, டாடா குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊழியர்களுக்குத் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதி வழங்கும். இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் 1961 ஆம் ஆண்டின் திறன் பயிற்சிச் சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள். NAPS மற்றும் NATS திட்டங்களின் கீழ் அவர்களது தகுதிகளின் அடிப்படையில் நியமன கடிதங்களைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திறன் வாய்ந்த ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் போது தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைக்கு ஏன் டாடா குழுமம் உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து ஏன் ஆட்களை கொண்டு வர வேண்டும்..? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், டாடா குழுமமும் இணைந்து 6 மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.