சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் வரும் 5ந்தேதி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 11ந்தேதி எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தீர்ப்பு வெளியான நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த தொகுதியின தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது சந்த் வீட்டில் இருந்தார். தீர்ப்பை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சோகத்துடன் காணப்பட்டனர். தீர்ப்பு குறித்து செய்தியளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய ஓபிஎஸ், ஐகோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்புக்கு, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, வரும் 5ஆம் தேதி (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என்று நீதிமன்றத்தில் முறையிடவும் ஒ.பன்னீர் செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.