சென்னை; அதிமுக தலைமை அலுவலகத்தில்  இன்று காலை இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, எடப்பாடி ஆதரவாளர் ஒருவரின் வாயில் ஓபிஎஸ் ஆதரவாளர் குத்து விட்டார். இதனால், அவரது வாயில் இருந்து ரத்தம் குபுகுழுவென கொட்டியது. அதுபோல அதிமுக அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை கோஷம் உச்சம் பெற்றுள்ளது. வரும் 23ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். அதுபோல,  எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம்  ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருவரையும் ஒற்றுமைப்படுத்த சில தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓ.‌பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றுகூடி ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அ‌தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. ஒற்றை தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டி ஓட்டியுள்ளனர். ஒற்றை தலைமை கோஷத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகரித்ததால் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழலில் இன்று ஓபிஎஸ், இபிஸ் அதிமுக தலைமை அலுவலகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒபிஎஸ் அலுவலகம் வந்தார். அதிமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மற்றொரு பக்கம் தீர்மான குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இபிஎஸ் வருவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதையொட்டி இருவரது ஆதரவாளர்களும் கூடி உள்ளனர். இந்த நிலையில், அங்கு திடீரென இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பெரம்பூர் அதிமுக நிர்வாகி ஒருவரை எடப்பாடி ஆதரவாளரா என கேட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய கூறப்படுகிறது. இதனால், அவரது வாயில் காயம் ஏற்பட்டதுடன், சட்டம் முழுவதும் ரத்தக்கறையானது.

இதையடுத்து, பெரம்பூர் அதிமுக நிர்வாகி ரத்தகாயங்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.  இந்த நிலையில், அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். ஜெயக்குமார் ஆதரவாளர்களும் பதில் முழக்கம் எழுப்பியதால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு குறித்தும், அதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தீர்மானம் குறித்து, இன்று 5வது நாளாக  ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் இறுதிசெய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், இன்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.