சென்னை: அதிமுக-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களாக கருதப்பட்ட பல மாவட்டச் செயலாளர்கள் இபிஎஸ்க்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனால், ஓபிஎஸ் ஆதரவு, கழுதை தேய்ந்து கட்டெறுப்பு கதையாக மாறி வருகிறது. தற்போதைய நிலையில் ஓபிஎஸ்-க்கு 6 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

 அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியின் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. பல அதிமுக தலைவர்கள் ஒற்றை தலைமை தேவை என குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் சம்மதம் தெரிவிக்க மறுத்து வருகிறார். இதனால், ஒற்றை தலையை எதிர்பார்க்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.

இதைத்தொடர்ந்து நாளை நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் தீர்மானம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  ஒற்றை தலைமை தொடர்பான தனித்தீர்மானத்தை கொண்டுவர பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்கு மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இதனால், அவர்களை தங்கள்வசம் இழுக்கும் முயற்சியில் இரு தரப்பினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தொடக்கத்தில், ஓபிஎஸ்-சுக்கு கிட்டதட்ட 15 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது, அவரது ஆதரவாளர்கள் இபிஎஸ்-ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.  இதனால், ஈபிஎஸ்க்கு நாளுக்கு நாள்  ஆதரவு பெருகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 7 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது அதில் ஒருவர் இபிஎஸ் அணிக்கு தாவி உள்ளார். அதன்படி,  மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிச்சாமியை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளத.

இதனால், ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 6ஆக குறைந்துள்ளது. இதனால் எடப்பாடி கை பலமாக ஓங்கி உள்ளதால், ஒபிஎஸ் அணியினர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர். அதிமுக கட்சி, ஒபிஎஸ் கையைவிட்டு போகும் சூழல் உருவாகி வருகிறது.