சென்னை: மத்தியஅமைச்சரவையில் ஓபிஎஸ் மகனுக்கு பதவி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள், அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளன. திமுக கூட்டணி ஏற்கனவே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், அதிமுகவிலும், முதல்வர் வேட்பாளர் இழுபறி முடிவடைந்த நிலையில், தேர்தல் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அதிமுகவுக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து சலசலப்பை உருவாக்கியதுடன், முதல்வர் வேட்பாளர் விஷயத்திலும் மூக்கை நுழைத்தது. அதுமட்டுமின்றி திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியது. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், பாஜகவுக்கு நேரடியாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் எடப்பாடியை சந்தித்து சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது.
ஏனெனில் தமிழகத்தில் பாஜக கால்பதிக்க வேண்டுமென்றால், திராவிடக்கட்சிகளின் தயவு தேவை. ஆனால், திமுக பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை, அதன் தலைமை ஒரேபோடாக போட்டு விட்டதால், மீண்டும் அதிமுகவின் காலடியில் சரணடைந்துள்ளது. அதையடுத்தே முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியது.
இதையடுத்து, இரு கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, அதிமுகவில் உள்ள ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்தியஅமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாஜக கூட்டணியுடன் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டி அதிமுக கூட்டணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. அதுவும், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளும் திமுக காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. அப்போதே, கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுகவுக்கு மத்தியஅமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், மத்தியஅரசு அதை கண்டுகொள்ளாத நிலையில், தற்போது மாநில சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு, ரவிந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, ஏற்கனவே உடைந்த அதிமுக கூட்டணி இணைந்தபோது, ஓ பன்னீர் செல்வம், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியில் வேண்டும் என கோரிக்கை வைத்ததும் நினைவூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளர். மத்திய அமைச்சரவையில் விரிவாக்கத்தின் போது அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கட்டாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதிமுக தொண்டனாகத்தான் தான் இந்த கருத்தை கூறுவதாகவும் அதிமுகவின் அதிகார பூர்வமான கருத்து அல்ல என்றும் அவர் விளக்கினார்
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்போது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அவர்களுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது