இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் அஷ்வினி சைனி. இவர் இந்தி மொழியில் வெளிவரும் தினசரி பத்திரிகையான ‘டெய்னிக் ஜாக்ரான்’ என்பதில் ஃப்ரீலேன்சர் முறையில் பணியாற்றி வருகிறார்.

அம்மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில், சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்கு அம்மாவட்ட நிர்வாகம் எவ்வாறு தோல்வியடைந்தது என்பது குறித்து ஒரு வீடியோ ரிப்போர்ட்டை, தான் பணிபுரியும் மீடியாவிற்காக தயார் செய்தார். இது நடந்தது ஏப்ரல் 8ம் தேதி.

அவ்வளவுதான், சுந்தர்நகர் உப-கோட்ட நீதிபதி ராகுல் செளஹான், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், சைனி மீது எஃப்ஐஆர் பதிவுசெய்தார். தவறான தகவலைப் பரப்புவதாக கூறி இந்த எஃப்ஐஆர் பதியப்பட்டது.

பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதலாக இதைக்கூறி, அம்மாநிலத்தின் பாரதீய ஜனதா முதல்வர் ஜெய்ராம் தாகூர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் சைனி.

விளைவு, அவர்மீது இன்னும் கூடுதலாக 2 எஃப்ஐஆர் பதியப்பட்டது. மிகப்பெரிய ஜனநாயகவாதிகளுக்கு கடிதம் எழுதியதால் வந்த விளைவு இது. அடுத்ததாக, அவர் தனது பணிக்காக பயன்படுத்தி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டு, மோட்டார் வாகன சட்டப்படி மற்றொரு எஃப்ஐஆரும் பதியப்பட்டது.  ஆகமொத்தம் அவர்மீது 5 எஃப்ஐஆர்.

இது ஒரு உதாரண சம்பவம் மட்டுமே. இவரைத்தவிர, ஓம் ஷர்மா மற்றும் விஷால் ஆனந்த் போன்ற பாதிக்கப்பட்ட பிற பத்திரிகையாளர்களும் உள்ளனர்.

இதுதொடர்பாக, டெல்லியை மையமாகக் கொண்ட உரிமைகள் மற்றும் அபாய பகுப்பாய்வு குழுவின் அறிக்கையின்படி, கோவிட்-19 தொடர்பான செய்திகளை வழங்கியதற்காக, மொத்தம் 55 பத்திரிகையாளர்கள் கைது, எஃப்ஆர் பதிவு, சம்மன் அல்லது விளக்கம் கேட்பு நோட்டீஸ்கள், உடல்ரீதியான தாக்குதல்கள், சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களில், உத்திரப்பிரதேசத்தில் 11, ஜம்முகாஷ்மீரில் 6, இமாச்சல் பிரதேசத்தில் 5, தமிழ்நாடு, மேற்குவங்கம், ஒடிஸா மற்றும் மராட்டியத்தில் தலா 4, பஞ்சாப், டெல்லி, மத்தியப் பிரதேசம், கேரளா ஆகியவற்றில் தலா 2, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், பீகார், குஜராத், சத்தீஷ்கர், நாகலாந்து, கர்நாடகா, அந்தமான் & நிகோபர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலா 1 என்று தகவலகள் பதிவாகியுள்ளன.

நன்றி: வயர்