டெல்லி: மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சபாநாயகர் இரு முகம் என்று குறிப்பிட்டு அவரது படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றியபோது இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், நீட் தேர்வு, முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர், தான் இந்துக்கள் குறித்து பேசவில்லை பாஜகவினர் குறித்தே பேசியதாக ஜகா வாங்கினார்.
இதைத்தொடர்ந்து, நேற்று (ஜூலை 2) மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அப்போது மோடி பேசத் தொடங்கியதும் பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டுனர். தொடர்ந்து, அமளிக்கு இடையே பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி 2 மணி நேரத்திற்கு மேல் பேசினார்.
பிரதமர் மோடி பேசி முடிக்கும்வரை எதிர்க்கட்சியினர் அமைதி காக்காமல் தொடர் முழக்கங்களை எழுப்பினர். ஆனால், அதை கண்டுகொள்ளாத பிரதமர், ராகுல் நடவடிக்கை, காங்கிரஸ் கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். அப்போது எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால், எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை அவைத் தலைவர் ஓம் பிர்லா கடுமையாக கண்டித்தார். இருப்பினும், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மணிப்பூருக்கு நீதி வேண்டுமென்றும் முழக்கமிட்டும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
பிரதமரின் உரைக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவையை தேதி குறிப்பிடாமல், அவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இதன்பிறகு காங்கிரஸ் கட்சி தரப்பில் சபாநாயகர் ஓம்பிர்லா ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. One Speaker Two Faces என அவரது படத்துடன் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.