சென்னை: பழம்பெரும் நடிகை நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி நிலத்தை அபகரிக்க முயற்றதாக  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அவர் போலி ஆவணங்கள் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் வசந்த மாளிகை படத்தில் ஜோடியாக நடித்தவர். நிறைய தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்த வாணிஸ்ரீ கருணாகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆனூர் கிராமத்தில் உள்ள பழமையான பங்களாவில் வசித்து வருகிறார். இவருக்கு சென்னை உள்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன.

இந்த நிலையில், அவருக்கு சொந்தமாக சென்னை அமைந்தகரையில் உள்ள ரூ.6 கோடி மதிப்புள்ள 3 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. தமீம் அன்சாரி என்பவர்,  வாணிஸ்ரீயின்  இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் வகையில், அட்வான்சாக ரூ.10 லட்சம் பெற்றுள்ளார்.

இந்த தகவல் கிடைத்த நிலையில், வாணிஸ்ரீ தரப்பில் காவல்நிலையத்தில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர்,  தமீம் அன்சாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.