டெல்லி

நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, வகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு, கடந்த 12-ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த 17ம் தேதி  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையி தாக்கல் செய்யப்பட்டபோது மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.அதன்படி இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியபோது, அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்த அமளியால் அவையை அதன் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்  அவை ஒத்திவைக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் கூட்டுக்குழுவிற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சலுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் மற்றும் பிபி சவுத்ரி மற்றும் காங்கிரசின் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் மக்களவை உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் பாஜகவை சேர்ந்த கன்ஷ்யாம் திவாரி, புவனேஷ்வர் கலிதா, டாக்டர் கே லக்ஷ்மன் மற்றும் கவிதா படிதார், காங்கிரசை சேர்ந்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் முகுல் வாஸ்னிக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சாகேத் கோகாய், திமுக சார்பில் பி.வில்சன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சய் சிங், பிஜேடி சார்பில் மனாஸ் ரஞ்சன் மங்கராஜ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் விஜய்சாய் ரெட்டி வத்ரா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.