கும்பகோணம்

கும்பகோணத்தில் நான்காவதாக ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தொற்று பரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாடெங்கும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  குறிப்பாகத் தமிழகத்தில் தினசரி பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  அகில இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.    இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சை போன்ற பல பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது.

குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கல்விக்கூடங்களில் கொரோனா பரவல் அதிக அளவில் காணப்படுகிறது.    ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 180 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.   இதைத் தவிர 3 கல்லூரிகளை சேர்ந்த 13 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இது இந்த மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளான நான்காவது கல்லூரி ஆகும்.   கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தஞ்சை மாவட்ட மக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது.