சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன்  தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவக் காலப் பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம், பொதுச் சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து வட்டார சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட, 850 சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக முதலமைச்சர் சட்டசபையில் 78 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அறிவித்தார். இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைவதற்கான இடம் தேர்வு குறித்த அடிப்படை தகவல்களும் இந்த கூட்டத்தில் பகிரப்படும். அத்துடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்குகள் கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை.  4307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தற்போது 1021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இரண்டே மாதாத்தில் காலியான உள்ள செவிலியர்கள் பணி நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.