சென்னை

பிரபல யூடியூபர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது குறித்து மருத்துவரிடம் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தபோது குழந்தை பிறந்தது முதல் அறுவை சிகிச்சை நடைபெற்ற அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுப்பதும் அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதுமான காட்சி இடம்பெற்றது. வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தமிழக மருத்துவ சட்டத்தின்படி இர்பானின் செயல் தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை, 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரசவம் பார்த்த மகப்பேறு டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். என்றும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்ததை தொடர்ந்து இர்பானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தற்போது இர்பான் தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், மருத்துவமனையில் அதனை அனுமதித்த டாக்டர் நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.