சென்னை: பொறியியல் மாணாக்கர் சேர்க்கை கடந்த 4 ஆண்டுகளில் 50% முதல் 55% வரை வீழ்ச்சியடைந்துவிட்டதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு, புதிய பொறியியல் மற்றும் ஃபார்மா கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்று ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
தற்போது இயங்கிவரும் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுவிட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் அனில் டி சஹஸ்ரபூதி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “குறைந்த மாணாக்கர் சேர்க்கையைக் கொண்ட கல்லூரிகளால் உள்கட்டமைப்பை பராமரித்து, ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாது. கடந்த 4 ஆண்டுகளில் பொறியியல் சேர்க்கை 50% – 55% குறைந்துள்ளது மற்றும் 2.5 லட்சம் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனவே, பொறியியல் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளன. அதிக காலியிடங்கள் உள்ள கல்லூரிகள் தங்களுக்கான இடங்களைக் குறைத்துக் கொள்கின்றன அல்லது கல்லூரியே மூடப்படுகிறது. ஆண்டிற்கு 2 முறை பொறியியல் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை கொண்டுவருவது குறித்தும் சிந்திக்கப்பட்டு வருகிறது. இரண்டு தேர்வுகளில் எதில் மதிப்பெண் அதிகமோ, அதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்” என்றார்.