பஞ்சிம்
கோவாவின் துணை சபாநாயகர் இசிதோர் பெர்னாண்டஸ் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்றவர் ஆவார்.
கோவாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேசிய தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வெளிநாட்டினரை மீண்டும் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். அது மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை பட்டியல் குறித்த போராட்டங்கள் இன்னும் நடந்து வருகின்றன.
தற்போது கோவா மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக இசிதோர் பெர்னாண்டஸ் பாஜகவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. அதை ஒட்டி கோவாவின் மனித உரிமை ஆர்வல்ர் ஏரெஸ் ராட்ரிஜியஸ் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெர்னாண்டஸ் குறித்து கேள்வி மனு அளித்தார்.
இந்த கேள்விக்கு தகவல் அறியும் ஆணையம் அளித்த பதிலின் மூலம் துணை சபாநாய்கர் இசிதோர் பெர்னாண்டஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி போர்ச்சுகீசிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இவர் காங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
இதையொட்டி ஏரேஸ் ராட்ரிஜியஸ், “வெளிநாட்டு குடியுரிமை பெற்ற துணை சபாநாயகர் பெர்னாண்டஸ் உடனடியாக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டும். அத்துடன் அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்த் அளித்துள்ள ஊதியத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும்” என அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ராட்ரிஜியஸ் தமது கோரிக்கைகள் 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்படவில்லை எனில் தாம் இசிதோர் பெர்னாண்டஸுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்