சென்னை: நிவர் புயல் காரணமாக, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், சென்னை காசிமேடு பகுதியில் கடல் அலைகள் தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரித்துச் செல்கின்றன.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக, நேற்று முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் பாதிப்பு குறித்து, எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை வானிலைமைய இயக்குனர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை உள்பட வங்கக்கடலில் கடல்அலை சுமார் 2 மீட்டர் உயர்த்து ஆர்ப்பரித்து வருகிறது. சென்னை காசிமேடு கடற்கரையில், கடல்அலைகள் தடுப்புகளையும் தாண்டி ஆர்ப்பரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.