சென்னை: வங்கக்கடலில உருவாகி உள்ள நிவர் புயல் கடநத 3மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 5 கிலோ மீட்டராக அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, நிவர் புயல் நாளை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், புயலாக மாறிய குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் தற்போது, புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, காரைக்கால்- மாமல்லபுரம் அதனை ஒட்டிய புதுச்சேரி பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
நிவர் புயல் உருவானதன் காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. மாமல்லபுரம் பகுதியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. கரையோரம் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம், கல்பாக்கம், புதுபட்டினம் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றது. அலை 9 அடி உயரத்திற்கு அலைகள் எழுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, காட்டுப்பள்ளி, கோரைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில், மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை மற்றும் வலைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கடலோர மீனவ கிராமங்களில் உள்ள மக்கள், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், ஊரப்பாக்கம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை கொட்டித் தீர்த்தது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியில்லாத காரணத்தினால் கேளம்பாக்கம், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுபட்டினம், கூவத்தூர் பகுதிகளில் உள்ள மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால், கரையோர மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை , புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளையும் வலைகளையும் டிராக்டர் உதவியுடன் தூரமான மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. முதலமைச்சர் நாராயணசாமி, கரையோரப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.